பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் – பாகிஸ்தானில் அதிரடி அவசர சட்டம்

பாகிஸ்தானின் இம்ரான்கான் தலைமையிலான அமைச்சரவை, பாலியல் குற்றவாளிகளுக்கு `கட்டாய ஆண்மை நீக்கம்’ செய்து தண்டனையளிப்பதற்கான புதிய அவசர சட்டம் ஒன்றை முன் வைத்துள்ளது. இதற்கு அந்நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்வி ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம், லாகூரை நோக்கி தன் குழந்தைகளுடன் காரில் சென்றுகொண்டிருந்த பெண்மணி, கார் பழுதாகி வழியில் நின்றபோது பின்னால் வந்த கும்பல் ஒன்றால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த பாகிஸ்தானும் கொந்தளித்து எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டி பல்வேறு போராட்டங்கள் நடந்த நிலையில், பாகிஸ்தானின் இம்ரான்கான் தலைமையிலான அமைச்சரவை, பாலியல் குற்றவாளிகளுக்கு `கட்டாய ஆண்மை நீக்கம்’ செய்து தண்டனையளிப்பதற்கான புதிய அவசர சட்டம் ஒன்றை முன் வைத்துள்ளது. இதற்கு அந்நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்வி ஒப்புதல் அளித்துள்ளார். 120 நாள்களுக்குப் பிறகு, இச்சட்டம் அங்குள்ள நாடாளுமன்றத்தால் நிரந்தர சட்டமாக அங்கீகரிக்கப்பட உள்ளது.

இந்தப் புதிய சட்டம் இப்பிரச்னைக்கு உகந்த தீர்வாக இருக்குமா, தண்டனைகள் கடுமையாவதால் குற்றங்கள் குறையுமா என்றெல்லாம் பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் நிலையில், “இந்தச் சட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கையை நிச்சயமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வழக்குகளை துரிதப்படுத்தி விரைவாகத் தீர்ப்பு வழங்குவதற்காக சிறப்பு நீதிமன்றங்களையும் ஏற்படுத்த இருக்கிறோம்” என்று பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

உண்மையில், தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறைந்துவிடும் என்பது நடைமுறையில் வெறும் நம்பிக்கையாக மட்டுமே இருந்து வருகிறது. பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை தெற்கு ஆசியாவிலேயே முதலாவதாக நடைமுறைப்படுத்திய நாடு பாகிஸ்தான்தான். அந்நாட்டின் ராணுவ தளபதியாகவும், ஆறாவது அதிபராகவும் விளங்கிய ஜியா உல் ஹக், முறை தவறிய பாலுறவு மற்றும் வல்லுறவில் ஈடுபடும் குற்றவாளிகளை பொதுவில் நிறுத்தி கல்லால் அடித்துக் கொல்லும் முறையை 1979-ம் ஆண்டிலேயே சட்டமாக்கியிருக்கிறார்.

அதன்பின், 2006-ம் ஆண்டு இந்தச் சட்டத்தை திருத்தியமைத்து, பெண்களை மட்டுமன்றி 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவோருக்கும் மரண தண்டனை என்று விரிவாக்கினர். ஆனாலும், அதன் பின்னர் வந்த 14 ஆண்டுகளில் பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் குழந்தைகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்திருப்பதாகத்தான் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

உலகளவில் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச தண்டணையான மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை எனப்படும் 25 ஆண்டுக்கால சிறைத்தண்டனையை விதித்த பின்னரும், குற்றங்கள் கொஞ்சமும் குறையாமல் ஆண்டுக்கு ஆண்டு சீராக அதிகரித்து வருகையில், ஆட்சியில் இருப்பவர்கள் இன்னமும் தண்டனைகளை மட்டுமே தீர்வாக நம்பியிருப்பது வருத்தத்துக்குரியது.

இந்தக் கட்டாய ஆண்மை நீக்கம் என்பது என்ன, அது உண்மையாகவே குற்றவாளிகளுக்குத் தண்டணையாக இருக்குமா என்பதும் விவாதத்துக்குரிய விஷயமாக இருக்கிறது. ஆண்மை நீக்கம் என்பது அறுவைசிகிச்சை அல்லது மருந்துகள் உட்செலுத்துவது என இரு வழிகளில் செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை முறையில் ஆண்களின் விதைப்பைகளை அறுவை செய்து முழுமையாக எடுத்து விடுவார்கள். வலி மிகுந்த இந்த முறையில், ஆண்களால் நிரந்தரமாகப் பாலுறவில் ஈடுபட முடியாத நிலை உருவாகும். ஆனால், பாலியல் குற்றவாளிகளுக்குத் தண்டனையாகச் செய்யப்படுவது `Chemical Castration’ எனப்படும், மருந்துகள் மூலம் அவர்களின் பாலுணர்ச்சிகளை மழுங்கடிக்கும் முறையாகும். இதை ஒரே ஓர் ஊசி போடுவதன் மூலம் செய்து விட முடியாது. குறைந்தது இரண்டு வருடங்களுக்காவது தொடர்ச்சியாக அவர்கள் உடலில் MPA (medroxyprogesterone acetate) என்ற மருந்தை ஊசி அல்லது மாத்திரை வழியாக செலுத்திக் கொண்டிருப்பார்கள்.

இது ஆண்களின் முக்கிய பாலுணர்வு ஹார்மோனான டெஸ்டோஸ்டீரானின் சுரப்பை மெல்ல மெல்லக் குறைத்து அவர்களை ஆண்மையற்றவர்களாக மாற்றுகிறது. இம்மருந்துகளால் தீவிர மன அழுத்தம், ஈரல் கோளாறுகள், எலும்பு அடர்த்தி குறைவது, முடி உதிர்வது போன்ற பக்க விளைவுகள் நிறைய இருந்தாலும் இதன் வீரியம் 4-5 ஆண்டுகள் மட்டுமே உடலில் இருக்கும் என்பதால் இது நிரந்தரமானதல்ல. மேலும், பாலுணர்வை மட்டுமே மந்தப்படுத்தும் இம்மருந்து, 8 மாதக் குழந்தையிடம்கூட மனிதத்தன்மையின்றி நடந்து கொள்ளும் மிருக உணர்வை எவ்வகையிலும் குறைப்பதில்லை. அதனால், மரண தண்டனைக்கும் ஆயுள் தண்டனைக்குமே குறையாத குற்றங்கள், இந்த ஆண்மை நீக்க தண்டனையால் குறைந்து விடுமாவெனத் தெரியவில்லை.

மேலும் இந்தச் சட்டத்தை இப்போது பாகிஸ்தான் அரசு முதன்முதலாகக் கண்டுபிடிக்கவில்லை. 1940-களில் இருந்தே இது இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் கனடா மற்றும் வளைகுடா நாடுகளிலும் வழக்கத்திலிருக்கிறது. மேற்கு நாடுகளில் ஆயுள் தண்டனையை விரும்பாத பாலியல் குற்றவாளிகள், ஆண்மை நீக்கத்தை சுயவிருப்போடு தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் பாகிஸ்தானின் இந்தப் புதிய சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறினாலும் இல்லாவிட்டாலும் பலன் எதுவும் பெரிதாய் இருக்காதென்றே தோன்றுகிறது. ஒவ்வொரு கொடூர பாலியல் வன்கொடுமை நிகழும் போதும், கொந்தளித்து எழும் பொதுமக்களின் உணர்வெழுச்சியையும், போராட்டங்களையும் தணிப்பதற்காக, பொங்கி வரும் பாலின் மீது நீர்தெளிப்பது போல இது போன்ற தீர்வுகளை முன்வைப்பது, ஆட்சியாளர்களின் உத்தியாக இருந்து வருகிறது. ஆனால், இவை எதுவும் பாத்திரத்தின் அடியில் எரியும் நெருப்பை சற்றும் குறைப்பதில்லை. மாறாக, இச்சட்டத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் அரசு எடுக்கவிருக்கும், சிறப்பு விரைவு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையும், வழக்குகளை விரைந்து முடிப்பதும் ஓரளவுக்கு பயன் தரக்கூடும்.

உண்மையில், பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களை குற்றவாளிகளை விடவும் கொடூரமாய்த் துன்புறுத்துவது, அவர்களைச் சூழ்ந்திருக்கும் சமூகமாகவே இருக்கிறது. குற்றவாளியை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணை மட்டும் குறை சொல்லும், கேலி பேசும், ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்க்கும் சமூகத்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு ஒத்துழைப்பும் பாதுகாப்பும் வழங்க முன்வராத காவல்துறையினர் மற்றும் வழக்கறிஞர்களாலும், ஆண்டுக்கணக்கில் வழக்கு நடந்தபின்னரும் முறையாக நீதி வழங்கப்படாமல் குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதாலும், நடக்கும் குற்றங்களில் நூற்றுக்கு 5 சதவிகிதம் மட்டுமே காவல்நிலையங்களில் பதிவாகின்றன என்கிறார்கள். எஞ்சியவர்கள் அவமானத்துக்கும், அலைக்கழிப்புக்கும், விசாரணைகளுக்கும் பயந்து தமக்கு இழைக்கப்பட்ட கொடுமையை வெளியில் சொல்வதே இல்லை.

ஆகவே அரசுகள், குற்றவாளிகளுக்கான தண்டனையை அதிகரிக்கும் அதே வேளையில், வழக்கு ஆண்டாண்டுகளுக்கு இழுக்கப்படாமலிருக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் மிகுதியாக அலைக்கழிக்கப்படாமல் தடுக்கவும், அவர்களை மனரீதியாக மேலும் அழுத்தத்துக்கு உள்ளாக்கும்படியான விசாரணைகளும் உடல் பரிசோதனைகளும் தளர்த்தப்படவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கவும் உரிய நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும்.

அந்த வகையில், இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் தற்போது இயற்றப்பட்டுள்ள திஷா (2019) சட்டத்தை ஒரு புதிய மாற்றமாகக் கருதலாம். இது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் ஆசிட் வீச்சு போன்ற குற்றச் செயல்களில், போதிய ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில், குற்றவாளிகளுக்கு 21 நாள்களுக்குள் மரண தண்டனை விதிக்க வகை செய்துள்ளது. இச்சட்டத்தின்படி, சம்பவம் நடந்த முதல் 7 நாள்களுக்குள் காவல்துறையினர் தங்களது விசாரணையை முடித்தாக வேண்டும். அடுத்த 14 நாள்களுக்குள் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு குற்றத்தின் தீவிரத்திற்கேற்ப தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டுவிடக் கூடாதென்ற அக்கறையில், அரசுகள் தினம்தோறும் நூற்றுக்கணக்கான கொடுங் குற்றவாளிகளை சட்டத்தின் ஓட்டைகள் வழியாக தப்ப வைத்துக்கொண்டே இருக்கின்றன. வழக்குகளை விரைந்து முடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் உரிய நீதி வழங்க ஆவன செய்யாதபட்சத்தில், இந்த ஆண்மை நீக்க தண்டனையையும் அத்தகைய ஓட்டைகளில் ஒன்றாகவே கருத வேண்டும்.

நன்றி விகடன்

 

Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05
Video thumbnail
மலையகம் நேற்று இன்று நாளை I Shortfilm
06:51
Video thumbnail
நிலைமாற்றம் I ShortFilm
07:21

Related Articles

Latest Articles