தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83.
தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து ‘குத்து’, ‘ஜோர்’, ‘ஏய்’, ‘திருப்பாச்சி’, ‘பரமசிவன்’, ‘சத்யம்’, ‘கோ’, ‘சாமி 2’, ‘காத்தாடி’ என பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். ஏற்ற இறக்கத்துடன் அவர் பேசும் வசனங்கள் தமிழில் மிகவும் புகழ்பெற்றன.
‘சாமி’ படத்தில் இடம்பெற்ற வசனங்கள் இன்றளவும் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. அதே போல விஜய் நடித்த ‘திருப்பாச்சி’ படத்தில் கோட்டா சீனிவாச ராவ் ஏற்று நடித்த ’சனியன் சகடை’ என்ற கதாபாத்திரமும் பெரும் வரவேற்பை பெற்றது.
வில்லன் கதாபாத்திரம் தவிர்த்து பல்வேறு குணச்சித்திர, நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் அவர் நடித்திருந்தார். ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் பெண் வேடமிட்ட சந்தானத்துடன் கோட்டா சீனிவாச ராவ் நடித்த காட்சிகளை தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கோட்டா சீனிவாச ராவ். பத்மஸ்ரீ மற்றும் நந்தி விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
சிலகாலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பால் அவதிப்பட்டு வந்தார். சில தினங்களுக்கு முன்பு மெலிந்த உடலுடன் இருக்கும் அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளானது. இந்த நிலையில் 83 வயதாகும் கோட்டா சீனிவாச ராவ் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஷ்ணு மஞ்சு வெளியிட்ட இரங்கல் பதிவில், “ஸ்ரீ கோட்டா ஸ்ரீனிவாஸ் அவர்களின் மறைவால் என் இதயம் கனத்து விட்டது. அற்புதமான நடிகர், ஈடு இணையற்ற திறமைசாலி, தான் நடித்த ஒவ்வொரு காட்சியையும் ஒளிரச் செய்த ஒரு மனிதர். அது தீவிரமான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, வில்லனாக இருந்தாலும் சரி, நகைச்சுவை வேடமாக இருந்தாலும் சரி, ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் அரிய திறமையுடன் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்தார்.
அவருடன் சில படங்களில் பணியாற்றும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. இன்னும் பல படங்களில் அவரைப் பார்த்து நான் வளர்ந்தேன். அவரது படைப்புகள் சினிமா மீதான எனது ஆர்வத்தை வடிவமைத்தன. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். நாம் அவரை உடல் ரீதியாக இழந்திருக்கலாம், ஆனால் அவரது கலை, சிரிப்பு மற்றும் அவரது ஆன்மா ஆகியவை அவர் அலங்கரித்த ஒவ்வொரு காட்சியிலும் வாழும். அமைதியாக உறங்குங்கள் ஐயா. உங்களை எப்போதும் நாங்கள் நினைவு கூர்வோம்” இவ்வாறு விஷ்ணு மஞ்சு தெரிவித்துள்ளார்.