ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன இணைந்து செயற்பட்டால் அது நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயமாக அமையும் என புதியதொரு கூட்டணிக்கான யோசனையை முன்வைத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ச .
இந்த கூட்டுக்கு தமது கட்சி தயார் எனவும், இது விடயத்தில் ஆன்மீக தலைவர்கள், சிவில் அமைப்புகள், ஊடகங்கள் என்பனவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பஸில் கூறினார்.
இது தொடர்பில் பஸில் ராஜபக்ச கூறியவை வருமாறு,
“ நாடு முழுவதும் சிறந்த ஏற்பாட்டு கட்டமைப்பு உள்ள பிரதான இரு கட்சிகள் நாட்டில் உள்ளன. ஒன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி. இரண்டாவது தேசிய மக்கள் சக்தி. அதேபோல மக்கள் சக்தி உள்ள இரு கட்சிகள் உள்ளன. ஒன்று ஐக்கிய மக்கள் சக்தி, இரண்டாவது மொட்டு கட்சி. ஏற்பாட்டு பலமும், மக்கள் சக்தியும் என இரண்டு பலமும் உள்ள கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவாகும். இதற்கிடையில் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர் எனக் கருதப்படுபவரின் கட்சிக்கு மக்கள் பலமும் இல்லை, ஏற்பாட்டு பலமும் இல்லை.
நாட்டை நிர்வகிக்ககூடிய சிறந்த தலைவர் இருத்தல் வேண்டும். ஆனால் மக்கள் ஆதரவு, ஏற்பாட்டு பலம் இல்லாத ஐக்கிய தேசியக் கட்சியில் அந்த வேட்பாளர் இருக்கின்றார். நாட்டுக்கு நன்மை பயக்க வேண்டும் எனில் மக்கள் பலம், ஏற்பாட்டு கட்டமைப்பு, சிறந்த வேட்பாளர் என மூன்று விடயங்களும் அவசியம்.
ஐக்கிய தேசியக்கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றாக இருந்துள்ளன. ஜே.வி.பியும் சந்திரிக்கா அரசில் இருந்துள்ளது. நல்லாட்சியின்போது இணைந்து செயற்பட்டது. எனவே, இந்த மூன்று தரப்புகளும் இணைந்து, நாட்டுக்காக தமது கடப்பாட்டை நிறைவேற்ற வேண்டும்.
நாட்டின் நலன்கருதி நாம் பல தியாகங்களை செய்தோம். மேலும் பல தியாகங்களையும் செய்ய தயார். இந்த இணைவுக்கான சாத்தியம் பற்றி நிச்சயம் ஆராயப்பட வேண்டும். வெளிப்படையாகவே நான் இந்த கருத்தை வெளியிடுகின்றேன். எந்தவொரு தரப்புமீதும் எமக்கு வைராக்கியம் கிடையாது.
நாட்டின் நலன்கருதியும், மக்கள் நலன்கருதியும் இணைய வேண்டிய இடத்தில் இணைந்து செயற்பட நாம் தயாராகவே இருக்கின்றோம். அறகலயவின்போதுகூட ஆட்சியமைக்க நாம் எதிரணிகளுக்கு அழைப்பு விடுத்தோம்.நாடாளுமன்றத்தில் ஆதரவை வழங்க முன்வந்தோம்.
தனித்து போட்டியிட்டு பின்னர் கூட்டணி அமைக்கலாம், அல்லது கூட்டணி அமைத்து மூன்று தரப்புகளும் களமிறங்கலாம். பிரதமர் வேட்பாளர் பதவி என்பதையெல்லாம் முன்னிலைப்படுத்தக்கூடாது. பெரும்பான்மை ஆதரவு உள்ள தரப்புக்கு முக்கியத்துவம் இருந்தால் நல்லம்.
நாட்டின் நலன் கருதி, மக்கள் நலன் கருதி இந்த கூட்டணிக்கு நாம் தயார். ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெமுரன இணைந்து செயற்பட்டால் நாட்டுக்கும், அனைவருக்கும் நன்மை பயக்கும். ஆன்மீக தலைவர்கள், சிவில் அமைப்பினர், ஊடகங்கள் என்பன இது விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
நான் இந்த யோசiனைய முன்வைப்பது தோல்வி பயத்தால் அல்ல, வடக்கு, கிழக்கில்கூட எமக்கு வாக்குபலம் உள்ளது.
அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து வெளியேறியவர்களையும் இணைத்துக்கொள்வதற்கு முயற்சிக்கின்றோம். ஆனால் கட்சிகொள்கை காட்டிக்கொடுக்கப்படமாட்டாது.” – என்றார்.