பாராளுமன்றத்தில் உரையாற்றும் உறுப்பினர்களின் அநாவசிய பேச்சுக்களை பாராளுமன்ற ஊடகவியலாளர்கள் நிராகரிக்க வேண்டும். அவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கக் கூடாது என தெரிவித்துள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அவ்வாறு முக்கியத்துவம் வழங்குவதால் மக்கள் குழப்பமடைய நேர்கிறதென தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்களையும் வேண்டாமென மக்கள் சொல்வார்களாயின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கான விசேட கருத்தரங்கு ஒன்று நேற்றைய தினம் கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் நடைபெற்றது. அங்கு விசேட உரையாற்றும் போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சரவை கலைக்கப்பட்டு, பிரதமர் பதவி விலக்கப்பட்டதால் என்ன நடந்தது? கிடைக்க வேண்டியதெல்லாம் கிடைத்து விட்டதா,?
அதே வேளை, புதிய பிரதமர் நியமிக்கப்பட்டு புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டு என்ன நடந்தது? எரிபொருள் கிடைத்து விட்டதா அத்தியாவசிய பொருட்கள் கிடைத்து விட்டனவா? அடுத்தது என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தைக் கலைத்து மீண்டும் தேர்தல் நடத்தினால் மீண்டும் 225 பேர் வருவர். அப்போது எல்லாம் சரியாகிவிடுமா? அப்படியானால் அரசியலமைப்பை வீசி எறிந்து விடுவோமா?
மக்களுக்கான பொறுப்பை நாம் சரியாக நிறைவேற்ற வேண்டும். அதனை பாதுகாப்பது அவசியம். நாடு மற்றும் எதிர்கால சந்ததியினர் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். பாராளுமன்றத்தின் மீதான மக்கள் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டியது அவசியமாகும்.
புதிதாக அரசாங்கம் அமைக்கப்பட்டு புதிதாக வந்தவர்களும் அதையே செய்து விட்டு போய்விடுவர். அந்த நிலையிலும் நாம் வாழ வேண்டியுள்ளது. எமது பிள்ளைகள் வாழ வேண்டும். கொரோனா சூழ்நிலையிலும் தொடர்ச்சியாக பாடசாலைகள் மூடப்பட்டன. மீண்டும் இப்போதும் பாடசாலைகள் மூடப்படுகின்றன. நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? என்றும் சபாநாயகர் கேள்வி எழுப்பினார் .
எதிர்நோக்கி வரும் நிலையில் சரியான புரிந்துணர்வை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் உறுப்பினர்களின் அநாவசிய பேச்சுக்கு பாராளுமன்ற ஊடகவியலாளர்கள் முக்கியத்துவம் வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்கும் போது தான் நாடும் குழப்பமடைந்து மக்களும் குழப்பமடைய நேர்கிறது.
1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். 80 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன . எனது வீடும் எரிந்தது. குழந்தையின் பால் போத்தல் மட்டுமே மிஞ்சியது. அவ்வாறு செய்தால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
நாட்டில் அனைத்துக்கும் அடிப்படையாக உள்ளது அரசியலமைப்பு. அரசியலமைப்பு பாதுகாக்கப்படும் இந்த நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். எமது கடமை முடிந்து விடலாம் எனினும் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். நாம் பாதுகாக்க வேண்டிய ஜனநாயகம் தொடர்பில் எமக்கு பயம் ஏற்பட்டுள்ளது. எல்லோரதும் தவறு உள்ளது. அந்த தவறு நாடு மற்றும் சமூக முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் மாற்றப்பட வேண்டும்.
பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளது. நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. அரசியல் தலைவர்கள் நூற்றுக்கு நூறு வீதம் சரியாக செயல்படுவதில்லை சிலர் சரியாக செயல்படுகின்றனர்.இங்கு மட்டுமல்ல உலகில் எங்கும் அப்படித்தான் நடக்கிறது. அதிகளவு நன்மை செய்பவர்களை பலப்படுத்தி தைரியப்படுத்த வேண்டும் அதுவே நாம் செய்ய வேண்டியதாகும் என்று சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த கருத்தரங்கில் அச்சு ஊடகம் மற்றும் இல்லத்திரனியல் ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
