‘புதிய பொலிஸ் தலைமையகத்தை நிர்மாணிக்க 10 பில்லியன் ரூபா செலவாகும்’

புதிய பொலிஸ் தலைமையகத்தை நிர்மாணிப்பதற்கு 10 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு 01 இல் தற்போது அமைந்திருக்கும் பொலிஸ் தலைமையகத்தை புதியதொரு இடத்தில் நிர்மாணிப்பதற்கு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி இலங்கை பொலிசுக்கு சொந்தமான பெப்பிலியான பிரதான வீதியில் – இலக்கம் 142, பெல்லன்தொட்ட சந்தி, அத்திடிய வீதி, தெஹிவல எனும் முகவரியில் அமைந்துள்ள சுமார் 14.5 ஏக்கர் காணியில் புதிய பொலிஸ் தலைமையகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

மேற்படி நிர்மாணப்பணிகளுக்கு சுமார் 10 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது என அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

” தற்போது பொலிஸ் தலைமையகம் யோர்க் வீதியும் விகாரை வீதியும் தொடர்புபடும் வீதிக்கு இடையில் 100 வருடங்களுக்கு அதிகமான பழைய 03 கட்டிடங்களில் இயங்கி வருவதுடன், குறித்த கட்டிடத்தொகுதியில் போதியளவு இடவசதியின்மையால் சிவில் நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட மேலும் சில பிரிவுகள் வாடகைக்கு அமர்த்தப்பட்ட  கட்டங்களில் இயங்கிவருகின்றன. இதற்கு மாதாந்தம் 25 மில்லியன் ரூபா  வாடகை செலுத்தப்படுகின்றது. எனவேதான் புதிய தலைமையகத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.” – என்றும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles