உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் நடந்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தாலும், அதற்கான சத்தியங்கள் இல்லை என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஆயினும் புத்தாண்டின் பின்னர் ஏப்ரல் மாத இறுதிக்குள் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை நடந்துவது தொடர்பில் தற்போது அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் திருத்தச் சட்டவரைவு தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்குக் கிடைத்து, அதைக் கடந்தவாரம் நாடாளுமன்றுக்கு சபாநாயகர் அறிவித்திருந்தால் கடந்த 6ஆம் திகதி அதுதொடர்பில் விவாதம் நடத்துவது என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆயினும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக் கிடைக்கவில்லை என்று சபாநாயகர் கடந்த 5ஆம் திகதி அறிவித்திருந்தார்.
இதனால் தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்கள் இல்லாது போயுள்ளன என்று தெரியவருகின்றது. ஆயினும் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைக்கும் பட்சத்தில் ஏப்ரல் மாத இறுதிக்குள் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்றும் அறியமுடிகின்றது.
