தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, ஹட்டன் நகரில் விசேட பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி விஜித்த அல்விஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புத்தாண்டு காலப்பகுதியில் மதுபோதையில் வாகனங்கள் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும் குறித்த காலப்பகுதியில் அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்வதற்காக, சிலர் எரிபொருள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், அவ்வாறு எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்படுவர் என எச்சரித்துள்ளார்.
எனவே, புத்தாண்டு காலத்தில் பிரதேசத்தில் அமைதியைக் கடைபிடிக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவர் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
