புரட்டாசி மாதம் இறை வழிபாட்டிற்கு உரிய மாதமாக இருந்து வருகிறது. குறிப்பாக மஹா விஷ்ணுவுக்கு உகந்த இந்த மாதத்தில் விஷ்ணு வழிபாடு பிரசித்தி பெற்றது. இம்மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று விசேஷமாக பார்க்கப்படுகிறது. மாத தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், இந்த நாளை பயன்படுத்தி தர்ப்பணம் கொடுத்தால் அவர்களுக்கு முன்னோர்களுடைய சாபம் நீங்கும். இந்த வரிசையில் புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமியும் மிகவும் அற்புதமான நாள் ஆகும். இந்நாளில் யாரை? எப்படி வழிபட வேண்டும்? அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்கிற ரகசியத்தை அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம் என்றாலும் இம்மாதத்தில் வரும் பௌர்ணமியில் சிவ வழிபாடு மேற்கொள்பவர்களுக்கு முக்தி கிடைக்கும். புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமியில் அம்பாளின் திருமுகம் பன்மடங்கு ஜொலித்து காணப்படும் என்று கூறப்படுகிறது. புரட்டாசி பௌர்ணமியில் அம்பாளை நினைத்து தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் தவம் மேற்கொள்வார்கள். அவர்களுடைய தவ வலிமை இந்நாளில் அதிகரிக்கும்.
இதன் காரணமாக புரட்டாசி மாத பவுர்ணமியில் பூஜைகள் செய்வது, தியானம் மேற்கொள்வது, மந்திரங்களை உச்சரிப்பது போன்ற செயல்களை செய்தால் நம் ஆத்ம சக்தி மேலும் அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல் அம்பாளுடைய பரிபூரண அருள் கிடைக்கும். நம் மனதை ஆட்கொண்டு நம்மை பாடாய்படுத்தும் தீய எண்ணங்களிலிருந்து விடுபட்டு, இறைவனை அடையக் கூடிய அற்புத நாளாகவும் இந்நாள் இருக்கும் என்பதால் அனைவரும் தவறாமல் புரட்டாசி பவுர்ணமி நன்னாளில் உங்கள் இஷ்ட தெய்வத்தை நினைந்து அவருக்கு உரிய மந்திரத்தை உச்சரித்து 5 நிமிடம் தியானம் இருந்தால் கூட போதும், அளப்பரிய நன்மைகளைப் பெறலாம்.
மேலும் புரட்டாசி பவுர்ணமியில் கிரிவலம் வருவது போன்ற விசேஷ வழிபாடு நடத்தப்படுவது உண்டு. இந்நாளில் சிவ வழிபாடு மேற்கொள்வது பூர்வ ஜென்ம பாவங்களை கூட நீக்கி நமக்கு இந்த ஜென்மத்தில் நல்வாழ்வு அருள செய்யும். இந்த அற்புதமான நாளில் சிவன் கோவிலுக்கு சென்று அவருக்கு நெய் விளக்கு ஏற்றி சிவ நாமத்தை உச்சரித்து வழிபட்டு வர வேண்டும். மேலும் இந்நாளில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்பவர்களுக்கு அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும் என்பதால் வில்வ இலைகளை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
பவுர்ணமி துவங்கியதும் சிவனுக்கு வீட்டில் அல்லது கோவிலுக்கு சென்று வில்வ அர்ச்சனை செய்யுங்கள். சுத்தமான பசு நெய் கொண்டு சிவனுக்கு அகல் விளக்கில் தீபம் போடுங்கள். இவ்வாறு செய்ய சிவனுடைய அருள் கிடைத்து இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மாறி நன்மைகள் நடக்கும். மேலும் சிவ வழிபாடு மட்டுமல்லாமல் இந்நாளில் மகாலட்சுமி பூஜை செய்வது கூடுதல் சிறப்பு பலனை கொடுக்கும்.
மஹாலக்ஷ்மிக்கு தாமரை மலர் சூட்டி சகஸ்ர நாம அர்ச்சனை செய்து குத்து விளக்கு தீபம் ஏற்றி, குங்கும அர்ச்சனை செய்தால் வேண்டிய வரம் வேண்டிய படி கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை உண்டாக, இப்பூஜையை செய்யலாம். மேலும் குழந்தை இல்லாத தம்பதிகள் மஹாலக்ஷ்மியை வேண்டி வரம் கேட்டால் உடனே குழந்தை பாக்கியம் உண்டாகும். இத்தகைய சிறப்புகள் மிகுந்த புரட்டாசி மாத பௌர்ணமி நன்னாளை இறை வழிபாட்டிற்கு பயன்படுத்தி அனைவரும் இறை அருள் பெறலாமே!