உலகிலேயே முப்படை பலத்தை கொண்டிருந்த புலிகள் அமைப்பை ஒழித்து, மக்கள் மத்தியில் இருந்த மரண பீதியை போக்கியதாலேயே மஹிந்த ராஜபக்சவை விட்டுச்செல்ல எனக்கு மனமில்லை – என்று நாடாளுமன்ற உறுப்பினர் டீ. வீரசிங்க தெரிவித்தார்.
தேர்தல்பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
“ஜே.ஆர். ஜயவர்தனவால் போரை முடிக்க முடியாமல்போனது. ஆயுதம் வழங்கி போரை முடிக்கலாம் என நினைத்த ரணசிங்க பிரேமதாச, அதே ஆயுதத்தால் புலிகளால் கொல்லப்பட்டார். டி.பி. விஜயதுங்கவாலும் போரை முடிக்கமுடியவில்லை. சந்திரிக்கா அம்மையாரும் கண்ணை இழந்தார்.
2005 இல் மஹிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடபோது தற்போது நாமலுக்கு நடந்ததுபோல கட்சி பிரமுகர்கள் கைவிட்டுச் சென்றனர்.சுதந்திரக் கட்சி தலைமையகத்தை சந்திரிக்கா மூடினார். ஆனால் மக்கள் மஹிந்தவை ஆதரித்தனர்.
புலிகள் அமைப்பு உலகில் பலம்பொருந்திய அமைப்பாக இருந்தது. தேச எல்லைஇருந்தது. தரைப்படை, கடற்படை, விமானப்படை, பொலிஸ் என அத்தனை படைகளும் இருந்தன. நீதிமன்றம் வங்கிக் கட்டமைப்பும் இருந்தது.
இப்படிபட்ட அமைப்பை தோற்கடித்து, மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த மரணபீதியை போக்கி, புது வாழ்வு தந்தார். அதனால்தான் என்றும் அவர் பக்கம் நிற்கின்றேன். யார் போனாலும் நான் மஹிந்தவை விட்டு செல்ல தயாரில்லை.”
பொலிஸ், காணி அதிகாரம் வழங்கப்படமாட்டா, ஒற்றையாட்சி பாதுகாக்கப்படும் என்ற உறுதிமொழியை நாமல் வழங்கியுள்ளார். வேறு வேட்பாளர்கள் இந்த உறுதிமொழியை வழங்கவில்லை.” – என்றார்.