பெருந்தோட்டப் பகுதிகளில் 1992 ஆம் ஆண்டு முதல் இதுவரையான 28 வருடங்களில், 39,934 வீடுகளே நிர்மாணிக்க ப்பட்டுள்ளன என்று, மனித அபிவிருத்தி நிதியத்தின் முன்னாள் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வ.புத்திரசிகாமணி தெரிவித்தார்.
தமிழ்மிரருக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், பெருந்தோட்டப் பகுதிகளில், நோர்வே அரசாங்கமும் டச்சு அரசாங்கமும் இணைந்து 14,000 வீடுகளை நிர்மாணித்துள்ளன என்றும் மலையகத்தில் இதுவரை கட்டப்பட்ட வீடுகளில், ஆகக் கூடுதலான வீடுகளை
நோர்வே-டச்சு அரசாங்கமே நிர்மாணித்துள்ளன என்றும் தெரிவித்தார்.
“ ஒருங்கிணைக்கப்பட்ட கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், 1,356 வீடுகளும் சமூக நலத்திட்டத்தினூடாக 3,900 வீடுகளும், ‘மாடி லயன்’ திட்டத்தின் கீழ் 735 வீடுகளும் அமைச்சினூடாக 4,021 வீடுகளும் புதிய வாழ்க்கை வீட்டுத்திட்டத்தின் கீழ் 1,132 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவ்வீடுகள் 2018 ஆம் ஆண்டே முழுமைப்படுத்தப்பட்டன” என்றார்.
அத்துடன் வேல்ட்விஷன் உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் பல இணைந்து 72 வீடுகளை நிர்மாணித்துள்ளனஎன்றும் அமரர் பெ.சந்திரசேகரனின் காலத்தில் அமல்படுத்தப்பட்டசுயவீட்டுத் திட்டத்தின் கீழ் 5,281 வீடுகளும், நூறு நாள் வேலைத்திட்டத்தில் 338 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
‘கிரீன் கோல்ட் அவுசிங்’ திட்டத்தின் கீழ், 1,069 வீடுகளும் டவுன்சிப்வேலைத்திட்டத்தில் 113 வீடுகளும், இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 3,000 வீடுகளும், இதைத்தவிர இலங்கை அரசாங்கத்தால் 4,000 வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.
இதைத்தவிர 1,200 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எனவே, பெருந்தோட்டத் பகுதிகளில் 28 வருடங்களில் 39,934 வீடுகளே நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்றுத் தெரிவித்த அவர் பிரசார மேடைகளில் கூறப்படுவதைப் போன்று 50,000 வீடுகளோ 60,000 வீடுகளோ கட்டப்படவில்லை என்றும் தெரிவித்தார். மலையக மக்கள் முன்னணியினர் 25,000 வீடுகளைக் கட்டியதாக பிரசார மேடைகளில் கூறித்திறிகின்றனர்.
அத்துடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 50,000 வீடுகளைக் கட்டியதாகக் கூறுகிறது.திகாம்பரம் 10,000 வீடுகளைக் கட்டியாதாகக் கூறினார். இவர்கள் அனைவரும் கூறுவதைப் பார்த்தால், மலையகத்தில் 85,000 வீடுகள் கட்டப்பட்டிருக்க
வேண்டும். ஆனால், 1992 முதல் மலையகத்தில், 39,934 வீடுகளே கட்டப்பட்டுள்ளன. அத்துடன் மனித அபிவிருத்தி நிதியத்தின் தலைவராக செயற்பட்ட காலத்தில், 7,000 வீடுகளே நிர்மாணிக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.
நன்றி தமிழ் மிரர்
