நாட்டிற்கு டொலர்களை கொண்டு வரும் ‘தோட்ட சமூகம்’ இதுவரை ‘தோட்ட தொழிலாளர் சமூகம்’ என்றே அழைக்கப்பட்டாலும் நாட்டுக்கு டொலர்களை கொண்டு வரும் இவர்களை ஐக்கிய மக்கள் சக்தி பல வருடங்களுக்கு முன்பிருந்தே மலையக சமூகம் என மரியாதையுடன் அழைத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மலையகத் தோட்டங்களைச் சுற்றி வாழும் சமூகத்தை லயன் அறைகளில் வைத்து தொடர்ச்சியாக தோட்டத் தொழிலாளர்களாக்காமல் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக்குவதுதான் ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாகும்.
ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இச்சமூகத்திற்கு பிரஜா உரிமையை வழங்கியது போல இச்சமூகத்திற்கு காணி உரிமையை வழங்கி, தமது வாழ்வாதாரத்தை தன்னம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லும் சிறிய தேயிலைத் தோட்ட சமூகத்தை உருவாக்குவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 134 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், இரத்தினபுரி, பெல்மடுல்ல ஸ்ரீ கிருஷ்ண மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மார்ச் 26 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வில், கல்லூரியின் நடனம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான ஆடைகளை பெறுவதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார்.
மலையக பெருந்தோட்ட சமூகத்தினரால் தான் இன்றும் நாடு சுவாசிக்கின்றது. கறுப்பினத்தவரான பராக் ஒபாமா, சிறுபான்மை கறுப்பின மக்கள் வாழும் அமெரிக்காவின் முழு அமெரிக்கர்களுக்குமான ஜனாதிபதியாக தெரிவானார். மலையக பெருந்தோட்ட சமூகம் என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள். பெருந்தோட்டத்துறையில் உள்ள தொழிலாளர் சமூகம் செய்த தியாகங்களினால் தான் இன்றும் எமது நாடு ஓரளவுக்கு சுவாசிக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
