இ.தொ.கா. என்பது இன்று நேற்று தோன்றிய ஒரு தங்குமடம் அல்ல: அது மலையக மக்களின் உரிமைக்காக அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானால் உருவாக்கப்பட்டு மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் வழியில் வீறுநடை போட்டு, ஜீவன் தொண்டமான் காலத்திலும் மக்களுக்காக பாடுபடும் மாபெரும் இயக்கமாகும். விருட்சமாக வளர்ந்து இலட்சக் கணக்கான மக்களுக்கு நிழல் பரப்பிக் கொண்டிருக்கும் அந்த ஸ்தாபனத்தை, குறை கூறுவதற்கு தகுதி இல்லாதவர்கள் எல்லாம் விமர்சிப்பது தான் வேடிக்கையாக இருக்கின்றது.
அந்த வகையில் அரசியலில் அரிச்சுவடி படிப்பதற்கு கால் பதித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தான் தோன்றித் தனமான கருத்துகளை கண்மூடித் தனமாக முன்வைத்திருப்பது அவரின் அறியாமையையும், இயலாமையையும் பறை சாற்றுகின்றது. இரண்டு முறை பாராளுமன்றத்துக்கு தெரிவாகி விட்டதால் அரசியலில் எல்லாம் தெரிந்த “மாமேதை” என்ற நினைப்பில் தவறான பிரசாரங்களை மேற்கொண்டு வரும் குமார் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும். அதுவே அரசியல் நாகரிகம் ஆகும் என்பதால் பின்வரும் கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன்.
கடந்த நல்லாட்சி என்று கூறிக் கொண்ட அரசாங்கத்தில் மலையகத்துக்கு சில நல்ல வேலைத் திட்டங்கள் இடம்பெற்றிருந்தாலும் வேலு குமார் போன்ற மலையக சமூகத்தைக் காட்டிக் கொடுக்கும் சில புல்லுருவிகள் சமூகத்துக்குக் செய்த தீங்குகளையும் மறந்து விட முடியாது. அவற்றை அவர்களால் மறுக்கவும் முடியாது.
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்லவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்த குமார் ஹந்தான பகுதியில் JEDB க்குச் சொந்தமான காணியைப் பிரித்துக் கொடுக்க ஒத்தூதி, ஒத்தாசை புரிந்து மலையக மக்களுக்கு கெடுதல் விளைய காரணமாக இருந்தவர் என்பதை அங்குள்ள மக்கள் அறிவார்கள். எமது மக்களுக்கு 7 பேர்ச் காணி கிடைத்த போது, பெரும்பான்மை பிரதேச சபை உறுப்பினர்களுக்கு 100 ஏக்கர் காணியைப் பெற்றுக் கொடுத்து அதற்கான ஒப்பனை கிடைக்கவும் உறுதுணையாக இருந்தார் என்பதை வரலாறு கூறும்.
வேலு குமாரின் திருகு தாளங்களை இ.தொ.கா. தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் பாராளுமன்றத்தில் தோலுரித்துக் காட்டியிருந்ததையும் மறந்து விட முடியாது.
அது மட்டுமா, கடந்த அரசாங்கத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டத்தை அந்தப் பகுதியில் கொண்டு வந்த போது, கொந்தரத்துக்காரர் ஒருவரிடம் “கொமிஷன்” பெற்றுக் கொள்ள அரசியல் “மாமேதை” குமார் கொடுத்த “டோர்ச்சரை” தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த கொந்தரத்துக்காரர் உயிரை மாய்த்துக் கொள்ள காரணமாக இருந்தவர் தான் இன்று இ.தொ.கா. வை விமர்சித்து அரசியல் ரீதியில் பிழைப்பு நடத்த எத்தனிக்கின்றார். இது எந்த வகையில் நியாயம் என்பதை அவரே உணர்ந்து கொள்ள வேண்டும்.
கண்டி மாவட்டத்தில் இ.தொ.கா. வுக்கு கணிசமான வாக்குகளை அளித்த மக்கள் இ.தொ.கா. வின் கொள்கைகளைப் புரிந்து கொண்டு எதிர்கால அரசியல் மாற்றத்துக்குத் தயாராக இருக்கின்றார்கள்: அவர்கள் தகுத்த நேரத்தில் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள், உண்மையான சேவைக்கு மக்கள் என்றும் மதிப்பளிக்கத் தவற மாட்டார்கள் என்பதும், அரசியல் வெத்து வேட்டுகள் அரை வேக்காடுகள் என்பதும் அப்போது வெட்ட வெளிச்சமாகி விடும்.
எனவே, மக்கள் சேவையே மகேசன் சேவை என்று அன்றும் இன்றும் அசைக்க முடியாத விருட்சமாய் வேரூன்றியுள்ள இ.தொ.கா. வை அசைத்துப் பார்க்க நினைக்கும் குமாரின் பகற்கனவு ஒரு போதும் பலிக்காது என்பதை விரைவில் மக்கள் உணர்த்துவார்கள். எமது பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் சமூகத் துரோகிகளுக்கு நிச்சயம் சாட்டையடி கொடுப்பார்கள். அனாவசியமான விமர்சனங்களை இனிமேலும் மேற்கொள்ளாமல் இருப்பதே மனிதனுக்கு அழகு என்பதை புரிந்து கொண்டு குமார் தன்னைத் தானே திருத்திக் பயணிக்க வேண்டும் என்பதை நாகரிகமாக எடுத்துரைக்க விரும்புகிறேன்!