மலையகச் சமூகம் எதிர்கொள்ளும் அனர்த்த சவால்கள் குறித்து நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு அனுமதியளிக்குமாறு கோரி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார்.
தனது கடிதத்தின் ஆரம்பத்தில், “இந்த விதிவிலக்கான சவாலான தேசிய நெருக்கடி காலத்தில் உங்களின் தீர்க்கமான தலைமைத்துவத்தை நாங்கள் ஏற்றுப் பாராட்டுகிறோம்.” – என்று மனோ எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
“அண்மையில் ‘டித்வா’ அனர்த்தத்தால் கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, காணி உரிமை, வீட்டு வசதி, கல்வி, சுகாதாரம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் ஒப்பீட்டளவில் குறைந்த மற்றும் சில துறைகளில் எதிர்மறையான மனித அபிவிருத்தி சுட்டெண்களை மலையகச் சமூகம் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது.
இந்தச் சமூகத்துக்கான மீட்பு மற்றும் விரைவான புனர்நிர்மாணக் கட்டத்தில் வேறுபட்ட மற்றும் இலக்கு வைக்கப்பட்ட அணுகுமுறை தேவைப்படுகின்றது.
எனவே, இந்தச் சூழலில், தனித்துவமான இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கான ஒருங்கிணைந்த மற்றும் நிலையான கட்டமைப்பைப் பற்றி ஆலோசிக்க, மலையகச் சமூகத்தின் அரசியல் மற்றும் சிவில் பிரதிநிதிகளை உள்ளடக்கிய அவசர சந்திப்புக்கு நேரமொன்றை ஒதுக்கித்தர வேண்டும்.” – என்றும் மனோ எம்.பி. தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.










