இலங்கையின் ஏற்றுமதியில் அதிக பங்கான 25 சதவீதத்தை இறக்குமதி செய்யும் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய வரி விதிப்பின் பின்னரான நிலைமையின் பாரதூரத்தை ஜனாதிபதி அனுரகுமார உணர வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
இது பழைய இடதுசாரி அரசியல் செய்யும் நேரமில்லை. மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி யுகத்தை நம் நாடு தாங்காது. தொழிற்துறை முடங்கி, வர்த்தகம் வீழ்ச்சி அடைந்து, பண புழக்கம் குறைய விட கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மிக சரியான சந்தர்ப்பத்தில் இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை நாம் இறுக பற்றி, வளர்ச்சி அடையும் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவுடன் சேர்ந்து கரையேற வேண்டும் எனவும் மனோ கணேசன் அறிவுரை வழங்கியுள்ளார்.
அமெரிக்க வரி விதிப்பு மற்றுமு; இந்திய பிரதமரின் வருகை ஆகியன தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மனோ கணேசன் இவ்வாறு குறிப்பட்டுளார்.
‘ கடந்த கால இலங்கை அரசுகள், இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா, போன்ற பல்வேறு நாடுகளுடன், பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்கள் செய்ய முயன்ற போது, அவற்றை, எதிர்த்து பல்கலைக்கழக மாணவர் அணி, தொழிற்சங்க படை ஆகியவற்றை தெருவில் இறக்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தடுத்த தமது பாவத்தை கழுவ வேண்டிய நிலைமைக்கு இன்று ஜேவிபி தள்ள பட்டுள்ளது.” எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே இது பழைய அரசியல் செய்யும் நேரமில்லை. நிலைமையின் பாரதூரத்தை அனுரகுமார உணர வேண்டும். இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற உலகின் முன்னேறிவரும் பொருளாதார சக்திகளுடன் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்கள் செய்ய ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க முன் வர வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.