தமிழ் மொழி மூல முறைப்பாட்டுக்கு அவசர தொலைபேசி இலக்கமான 107 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களை மையமாகக் கொண்டு, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் தமிழ் மொழி மூல முறைப்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (16) வவுனியாவில் இடம்பெற்றது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக ஆகியோரின் பங்குபற்றுதலுடன் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.
வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் சமந்த விஜயசேகர தலைமையில் பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலய வாளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட அரச அதிபர் க. கனகேஸ்வரன், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார், வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரட்ண உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படை அதிகாரிகள், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், மதத்தலைவர்கள், கிராம அலுவர்கள், சமுதாய பொலிஸ் குழு உறுப்பினர்கள், வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
24 மணிநேரமும் சேவையிலுள்ள “107″ அவசர அழைப்பு மத்திய நிலையம் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக , பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும்உயர் பொலிஸ் அதிகாரிகளின் பங்கேற்புடன் 2024.03.16 ஆம் திகதி இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
இத் திட்டமானது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க ஜனாதிபதியின் வழிகாட்டலின் பேரில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் செறிந்து வாழும் தமிழ் மக்களை அடிப்படையாக கொண்டு “107″ எனும் அவசர அழைப்பு தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் இயங்குவதுடன், இச் சேவைக்காக தமிழ் மொழி பேசும் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு சிங்களம் மொழியிலும் முறைப்பாடு மற்றும் தகவல்களை வழங்க முடியும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் செறிந்து வாழும் தமிழ் மக்களை அடிப்படையாக கொண்டு “107″ எனும் அவசர அழைப்பு தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் இயங்குவதுடன், இச் சேவைக்காக தமிழ் மொழி பேசும் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு சிங்களம் மொழியிலும் முறைப்பாடு மற்றும் தகவல்களை வழங்க முடியும்.
இதன் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் அப்பிரதேசங்களுக்கு தனது தேவைகளுக்கேற்ப வருகைத்தரும் மக்களின் உயிர் மற்றும் சொத்துகளுக்கு ஆபத்து ஏற்பட்டால் 107 எனும் அவசர அழைப்பு மத்திய நிலையத்திற்கு அழைப்புவிடுத்து பொலிசாரின் உதவியை உடனடியாக பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இத் தொலைபேசி இலக்கத்தினூடாக குற்றம் மற்றும் குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள், சட்ட விரோத போதைப் பொருள்கள், மதுபானம் விற்பனையாளர்கள், சுற்றுச் சூழல் மாசுபடுத்தல், வீதி விபத்துகள், இயற்கை மற்றும் மனித நடவடிக்கையால் ஏற்படும் பேரழிவுகள் தொடர்பான முறையான தகவல்களை அவசர அழைப்பு மத்திய நிலையத்திற்கு அறிவிக்க முடியும்.
பொதுமக்களுக்கு முறையான மற்றும் பயனுள்ள சேவையை வழங்குவதற்கு இவ் மத்திய நிலையம் நிறுவப்படுவதற்கான நோக்கமாகும். இத் தொலைபேசி மத்திய நிலையத்திற்கு கிடைக்கப்பெறும் தகவல்கள் தொடர்பான இரகசியத்தன்மை பாதுகாக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கு உடனடி சேவை வழங்குவதே எமது நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.