“ஒற்றையாட்சிக்குள் அனைத்து இன மக்களும் சமமாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதே எமது நோக்கமாகும். பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது, ஒரே நாடு ஒரே சட்டம் என்பதே எமது முகாமின் கொள்கை.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பனர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் பகிரப்படுமா என ஜனாதிபதியிடம் நாம் வினவினோம், இவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
ஆனால் எமது கொள்கை அதுவல்ல, ஒரு தேசியக் கொடி, ஒரே தேசியகீதம் மற்றும் ஒற்றையாட்சிக்குள் அனைத்து இன மக்களும் இன, மத பேதமின்றி சமமான வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.
பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது, ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற அடிப்படையிலேயே எமது செயற்பாடு அமையும். இனம் இனவாத அணி கிடையாது, தேசியவாத அணியாகும். சிலவேளை ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்திருந்தால், தேர்தலின் பின்னர் பொலிஸ், காணி அதிகாரங்களை அவர் வழங்கிவிட்டால் நாம் என்ன செய்வது?” – என்றார்.










