பொலிஸ் திணைக்களம் என்பது மக்களை சுட்டுக்கொல்லும் நிறுவனம் அல்ல, நாரம்மல துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், பதில் பொலிஸ்மா அதிபரும் பொறுப்புக்கூற வேண்டும் – என்று தேசிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா கூறியவை வருமாறு,
“ பொலிஸார் சிவில் உடையில் சென்று மக்களை சுட்டுக்கொலை செய்யும் அராஜக நிலை உருவாகியுள்ளது. நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பணத்தை வழங்கி பிரச்சினையை மூடிமறைப்பதற்கு பதில் பொலிஸ்மா அதிபர் முற்படுகின்றார். உயிரிழந்த நபரின் உயிருக்கான பெறுமதி ரூ. 10 லட்சமா?
பொலிஸார் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுவருகின்றனர், ஆட்சியாளர்களே பொலிஸாரை இந்நிலைக்கு தள்ளியுள்ளனர். தமது அரசியல் எதிராளிகளுக்கு எதிராக பொலிஸாரை பயன்படுத்துகின்றனர், சட்டத்துக்கு அப்பால் சென்று தாம் கூறுவதை செய்யுமாறு ஆட்சியாளர்களால் அரச அதிகாரிகள் தூண்டப்படுகின்றனர். இப்படியான சம்பவங்கள் அதன் வெளிப்பாடுதான்.
நாரம்பல துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை சாதாரண சம்பவமாக கருதிவிட முடியாது. வாகனத்தை நிறுத்தாவிட்டால் பொலிஸார் சூடுநடத்துகின்றனர் எனில் அது பாரதூரமான விடயமாகும். பொலிஸாரை அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தியதாலேயே இப்படி செயற்படும் நிலை உருவாகியுள்ளது.
நாட்டில் பொலிஸ்மா அதிபர் இல்லை, பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டியவர்களுக்கு எதிராக மனித உரிமைமீறல் உட்பட பல குற்றச்சாட்டுகள் உள்ளன.
பொலிஸ் அதிகாரியை கைது செய்தவுடன் இந்த பிரச்சினை தீராது, பதில் பொலிஸ்மா அதிபரும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். தற்போது யுக்திய நடவடிக்கைகூட சட்டத்துக்கு புறம்பாகவே இடம்பெற்றுவருகின்றது.
பொலிஸ் திணைக்களம் என்பது மக்களை சுட்டுக்கொல்லும் நிறுவனம் அல்ல, அது மக்களை காக்கும் துறை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.” – என்றார்.










