தாய்லாந்தின் மத்தியப் பகுதியிலிருக்கும் பௌத்த விகாரை ஒன்றில் இருந்த அனைத்து பிக்குகளும் போதைப் பொருள் பாவனை தொடர்பான பரிசோதனையில் தோல்வியடைந்தமையால் அவர்கள் அனைவரும் மதக்கடமைகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அங்கு மதக்கடமையிலிருந்த நான்கு பிக்குகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் மெத்தாம்பெட்டமைன் எனும் போதைப் பொருளை பாவித்திருந்தமை தெரியவந்தது.
இதையடுத்து அந்த நான்கு பிக்குகளும் வைத்திய பரிசோதனை மற்றும் புனர்வாழ்விற்கு அனுப்பப்படுவார்கள் என உள்ளூர் அதிகாரியான பூன்லெர்ட் திண்டபதி கூறியுள்ளார்.
பிக்குமார் மீதான நடவடிக்கை காரணமாக பெட்சாபுன் மாகாணத்தில் புங் சாம் பான் என்ற மாவட்டத்திலுள்ள அந்த சிறிய அந்த பௌத்த விகாரையில் அனைத்து மத வழிபாடுகளும் முற்றாக தடைப்பட்டுள்ளன.
“அந்த விகாரையில் இப்போது வழிபாடுகளை நடத்த பிக்குகள் இல்லை, அதனால் அருகில் உள்ள கிராமங்களிலுள்ள மக்கள் தமது நன்னெறிகளில் ஒன்றான பிக்குகளுக்கு தானங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்” என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
மக்களின் கவலைகளை அடுத்து அங்கு வேறு விகாரைகளிலிருந்து பிக்குகளை அனுப்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என பூன்லெர்ட் திண்டபதி அறிவித்தார்.
இதுத் தொடர்பில் மாகாணத்தின் தலைமை பௌத்த தேரருடன் இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
தாய்லாந்தில் பௌத்த பிக்குகள் முறைதவறி நடந்துகொள்வது இது முதல் முறையோ அல்லது ஒரு தனியான சம்பவம் அல்ல அவர்கள் பொது வெளியில் பல சந்தர்ப்பங்களில் மோசமாக நடந்துகொண்டுள்ளமை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மைக் காலங்களில் தாய்லாந்தில் உயர்நிலைகளில் உள்ள பிக்குகள் ஊழல்கள், கொலைகள் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தல் ஆகியவை தொடர்பில் பாரதூரமான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி கைது செய்யப்பட்டனர்.
இந்தாண்டு மார்ச் மாதம் தனக்கு அமானுஷ்ய சக்தி இருப்பதாக சுயபிரகடனம் செய்து கொண்ட லுஆங் பு துனச்சாய் என்ற பிக்கு மது போதையில் வாகனம் ஓட்டியதற்காகவும் போதைப் பொருள் வைத்திருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் மத பணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அவரிடமிருந்து ஏராளமான மெத்தாம்பெட்டமைன் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
முன்னதாக இந்த வருடம் ஜனவரி மாதம் மற்றொரு பிக்கு உள்ளூர் இளைஞர்களுக்கு மெத்தாம்பெட்டமைன் மாத்திரைகளை விற்பனை செய்ததோடு, பாவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த காவி உடையும் பறிக்கப்பட்டது.
சில பிக்குகளின் இவ்வாறான நடவடிக்கைகள் பௌத்த மதத்திற்கும் நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகத் தீவிர பக்தர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அவர்களின் நடவடிக்கைகள் மூலம் பௌத்த மதத்தின் மீதான நம்பிக்கை சீர்குலைந்து போவதாகவும், நாட்டில் உள்ள பௌத்த விகாரைகள் சீர்திருத்தப்பட வேண்டும் எனவும் தேசியளவில் இப்போது குரல்கள் எழுந்துள்ளன.
பௌத்த மடாலயங்கள் மற்றும் விகாரைகளில் இருக்கும் சில தீய சக்திகள் களையெடுக்கப்பட வேண்டும் என தேசிய பௌத்த சங்கம் தெரிவித்துள்ளது.