சாயம் பூசப்பட்ட போலி இரத்தினக் கல்லைக் கட்டி 60 வயதுடையவயோதிப பெண்ணின் தங்கச்சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, கலவான பிரதேசத்தில் இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
மாணிக்கக்கல்லின் பெறுமதி அதிகமாக இருக்கின்ற போதிலும் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதால் அவற்றைப் பெற்றுக்கொண்டு பணம் தருமாறு வயோதிபப் பெண்ணிடம் கேட்கப்பட்டுள்ளது.
இரத்தினக்கல் சம்பந்தமாக எந்தவிதமான அறிவும் இல்லாத வயோதிபப் பெண், இளம் பெண் மீது அனுதாபம் கொண்டு தன்னிடம் பணம் இல்லை, தேவையென்றால் தன் கழுத்தில் உள்ள ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச்சங்கிலியை அடகு வைத்து பணத்தைபெற்று கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து போலி இரத்தினக் கற்களும் தங்க சங்கிலியும் கைமாறியுள்ளது.தங்கச் சங்கிலியைப் பெற்றுக் கொண்ட பெண்ணும் தலை மறைவாகினார். அதே சந்தர்ப்பத்தில் வயோதிபப் பெண் அந்த இரத்தினக் கற்களை பத்திரமாக எடுத்துச்சென்று ஒரு இரத்தினக்கல்லை ஒருவியாபாரியிடம் காட்டியுள்ளார்.
இரத்தினக்கல்லைப் பரீட்சித்துப் பார்த்தபோது அவை சாயம் பூசப்பட்ட போலியானவை எனத் தெரியவந்ததையடுத்து இதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து சி.சி.டி.வி. தொழில் நுட்ப கமராக்களை பயன்படுத்தி சந்தேக நபரைக் கைது செய்யமுயற்சிகள் மேற்கொண்டு வருவ தாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.