‘மக்கள் வீதியில் இறங்க தயாராகிவிட்டனர்’ – மைத்திரி விடுத்துள்ள எச்சரிக்கை!

” எரிபொருள் உட்பட பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் நாட்டில் மோசமானதொரு நிலை உருவாகியுள்ளது. விரக்தியில் இருக்கும் மக்கள், அரசியல்வாதிகளை நிராகரித்து தமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்துவதற்கு போராட தயாராகிவருகின்றனர்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதுளை மாவட்ட மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறினார்.

” எரிபொருள் விலை நேற்றிரவு (நேற்று முன்தினம் இரவு) அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் மோசமானதொரு நிலைமை உருவாகியுள்ளது. மக்கள் அரசியல்வாதிகளை நிராகரித்து, தமது கவலையை, வேதனையை வெளிப்படுத்துவதற்காக மக்கள் போராட தயாராகிவருகின்றனர்.

தமக்கு வாழ வழியில்லை, இதற்கு மேலும் பொறுமைகாக்க முடியாது. வீதியில் இறங்குவது மட்டுமே எஞ்சியுள்ளது என மக்கள் தமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்துவதை ஊடகங்கள் வாயிலாக செவிமடுக்கமுடிகின்றது. ஊருக்கு சென்றாலும் மக்கள் இவ்வாறே கருத்துகளை முன்வைக்கின்றனர்.

கூட்டத்துக்கு வந்துள்ள மக்கள் எமது உரைகளை செவிமடுத்தாலும், வீட்டுப்பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்பதுதான் அவர்களின் சிந்தனையில் ஓடிக்கொண்டிருக்கின்றது. உணவுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

கடந்த இரு வருடங்களில் அரசு தீர்மானங்களை எடுத்தது, ஆனால் சுதந்திரக்கட்சியினரை இணைத்தக்கொள்ளவில்லை. அரசின் தன்னிச்சையான செயற்பாடுகளே இந்நிலைமைக்கு காரணமாகும்.” – என்றார் மைத்திரி.

Related Articles

Latest Articles