மதில் இடிந்து விழுந்து மாணவி உயிரிழப்பு – விசாரணைக்கு விசேட குழு!

வெல்லம்பிட்டி – வெஹரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் நீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்த மதில் சுவரொன்று உடைந்து வீழ்ந்ததில் மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் எயார் மார்சல் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேல் மாகாண பிரதம செயலாளர் பிரதீப் யசரத்னவிற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரு வாரத்திற்குள் விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றதும், சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு மாணவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர், வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்தார்.

வெல்லம்பிட்டி, வெஹெரகொட கனிஷ்ட வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு தண்ணீர் பெறுவதற்காக, குழாய்களுடன் கூடிய கட்டமைப்பானது கொங்கிரீட் செய்யப்பட்ட மதிலுடன் இணைத்து நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

குறித்த மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் காயமடைந்த 5 மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

Latest Articles