மத்திய மாகாண பாடசாலைகளில் பயனற்ற நிலையில் சூரிய மின்சக்தி கட்டமைப்புகள்

மத்திய மாகாணத்தில் தமிழ், சிங்கள மொழி மூலமான பல பாடசாலைகளுக்கு தொண்டர் நிறுவனங்களால் சூரிய மின்சக்தி கட்டமைப்புகள் வழங்கப்பட்டன. பெரும் தொகை பணச்செலவில் இவை இலவசமாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.சூரிய மின்சக்தியில் இயங்கக் கூடிய தொலைக்காட்சிகள், கணினி மற்றும் மின்சார உபகரணங்களும் வழங்கப்பட்டது.

பாடசாலைகளுக்கும் அதிபர், ஆசிரியர் விடுதிகளுக்கும் சூரிய மின்சக்தி கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

இவற்றுக்குத் தேவையான மின்சுற்றுகள் தரமானதாக அமைக்கப்பட்டன. சூரிய மின்சக்தியை சேமிக்கக் கூடிய பெருமதியானதும் மின்கொள்ளவு அதிகமுடையதுமான மின்சேமிப்பு பற்றரிகளும் பொருத்தப்பட்டிருந்தன. கடும் மழை காலத்திலும் சூரியமின்சக்தி கிடைக்கக் கூடியதான அதிசக்தி மிக்க கட்டமைப்புகள் பொருத்தப்பட்டு பல வருடங்கள் சிறந்த பாவனையும் இருந்து வந்தது.

இக்காலப் பகுதியில் மினசாரத்திக்கான செலவு இருக்கவில்லை. பாடசாலைக்கோ அரசுக்கோ மின்சாரச் செலவு இருக்கவில்லை. அதிபர், ஆசிரியர் விடுதிகளில் தங்கி இருந்தவர்களுக்கும் மின்சாரத்திற்கான செலவு சிறிதேனும் இருக்கவில்லை. மின்துன்டிப்பின் போதும் இவர்களுக்கு எதுவிதமான பாதிப்பும் இருக்கவில்லை. இன்று இந்த சூரியமின்சார கட்டமைப்புகள் பயனற்று செயலிழந்து போய்க் கிடக்கின்றன.

சூரியமின்சக்தி கட்டமைப்பின் பிரதான அங்கமாக காணப்படும் தட்டுகள் தாழ்வாக நிலத்தில் பொருத்தப்பட்டமையால் ஆடுகள், நாய்கள் போன்ற விலங்குகள் இவற்றின் மீது ஏறுவதால் இந்ந தகடுகள் உடைந்து பாதிப்படைந்துள்ளன. சிறுவர்கள் இவற்றின் மீது ஏறி விளையாடியும் இவை பாதிப்புகளுக்கு உள்ளாகின.

கஷ்டப் பகுதி பாடசாலைகளுக்கே இந்த சூரியமின்சக்தி கட்டமைப்புகள் வழங்கப்பட்டன.இவ்வாறான பாடசாலைகளில் பாடசாலை வளவுக்கான வேலி இன்மையால் இவற்றை பாதுகாக்க முடியாது போனது.இந்த சூரிய மின்கட்டமைப்புகளை சீர்செய்தால் மீண்டும் பாவனைக்கு கொண்டு வர முடியும்.

நிருபர் – ஆர்.நவராஜா

Related Articles

Latest Articles