மலையக அதிகார சபை கலைக்கப்பட மாட்டாதெனில் பாதீட்டில் போதுமான நிதி ஒதுகீடு செய்க!

மலையக அதிகார சபை கலைக்கப்பட மாட்டாதெனில் பாதீட்டில் போதுமான நிதி ஒதுகீடு செய்க!

– முன்னாள் எம் பி திலகர் அரசாங்கத்திடம் கோரிக்கை

அரச பொறிமுறை ஊடாக மலையக மக்களுக்கு சேவயாற்றக் கூடிய விதத்தில் உருவாக்கப்பட்ட மலையக அதிகார சபை கலைக்கப்படமாட்டாது எனும் எழுத்து உத்தரவாதத்தை வழங்குவதோடு 2026 ஆண்டு வரவு செலவு திட்டத்தில் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்வதன் மூலம் தொடர்ந்து அதிகார சபையை நடாத்தி செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பொது மக்கள் கையெழுத்து இயக்கம் மூலமாக கோரிக்கை வைப்பதாக மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.

மலையக அரசியல் அரங்கத்தின் சார்பில் 20/09/2025 ( சனிக்கிழமை) ஹட்டனில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே திலகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

” மலையக அரசியல் வரலாற்றில் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம 19 ஆம் திகதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். அன்றைய தினமே மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு சேவையாற்றக் கூடிய வகையில் பிரதேச சபைச் சட்டம் திருத்தப்பட்டது டன் , பெருந்தோட்டப் பிராந்தியத்தில் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை (மலையக அதிகார சபை) சட்டமும் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஆனாலும் இன்று 7 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் மலையக அதிகார சபையைக் கலைப்பதற்கு அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த அதிகார சபை கலைக்கப்படக்கூடாது என அதன் பணிப்பாளர் சபை எழுத்து மூல மனு ஒன்றை அரசாங்கத்திடம் கையளித்து இருப்பதையும் அறிகிறோம். அரசியல் தரப்பில் கலைக்கப்பட மாட்டாது எனும் வாய்மொழி உத்தரவாதம் மட்டுமே வழங்கப்படுகிறது.

மலையகப் பெருந்தோட்ட மக்களின் சமூக நல, உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கென உருவாக்கப்பட்டதே பெருந்தோட்டப் பிராந்தியந்துக்கான புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையாகும் (NEVIDA). இதுவே மலையக அபிவிருத்தி அதிகார சபை எனப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட இந்த சபையை கலைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் 2024 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் பட்டியலிடப்பட்டு 2025 செப்டம்பரில் ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் மலையக சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகளின் பின்னர் கலைக்கப்படமாட்டாது என அரச தரப்பில் குறிப்பிடப்படுகிறது.

இந்தப் பின்னணியில், பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசாங்கத்திடம் இந்த பொது மக்கள் மனுவை சமர்ப்பிக்கின்றோம்.

1. பெருந்தோட்டப் பிராந்தியந்துக்கான புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையானது (NEVIDA) கலைக்கப்படும் அரச நிறுவனங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும்.

2. அத்தகைய நீக்கத்திற்கான தீர்மானத்தினை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.

3. பெருந்தோட்டப் பிராந்தியந்துக்கான புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையை (NEVIDA) மறுசீரமைப்பின்பேரில் அதிகாரக் குறைப்பு செய்தல் கூடாது.

4. அதிகார சபையை தொடர்ந்து உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்யும் வகையில் எதிர்வரும் 2026 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் போதுமான நிதியினை ஒதுக்கீடு செய்வதுடன் அதனூடாக அபிவிருத்தி நடவடிக்கைபனை முன்னெடுத்தல் வேண்டு;ம்.

எமது மேற்படிக் கோரிக்கைகளை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு நிறைவேற்ற வேண்டுமேன இம்மனுவில் கையொப்பமிட்டடு பொதுமக்கள் மனுவாக கையளிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

எதிர்வரும் ஒக்.டோபர் 10 திகதி அளவில் உத்தியோகபூர்வமாக மனுவை கையளிக்க உள்ள நிலையில் இந்த நோக்கத்தில் ஆர்வமுள்ள அமைப்புகள் முன்வந்து மக்கள் கையெழுத்துக்களைப் பெற்று தருவதற்கு ஏதுவாக எமது மனுவின் மாதிரியை சமூக வலைத் தளங்களில் வெளியிட உள்ளோம் எனவும் தெரிவித்தார்

Related Articles

Latest Articles