‘ புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை நீக்குவதற்குரிய முயற்சி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.” என்று இ.தொ.கா பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
” புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையானது நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டதாகும். இதனை நாம் வரவேற்றிருந்தோம். குறித்த அதிகார சபையானது பெருந்தோட்ட மக்களுக்கு சேவைகளை செய்வதற்கு தேவைப்படுகின்ற ஒரு இயந்திரமாகும்.
அதேபோல மனிதவள அபிவிருத்தி நிதியத்தினை பயன்படுத்தி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசியல் பலம் மூலம் பெருந்தோட்ட நிறுவனங்களினை கட்டுப்படுத்தி மக்களுக்கான சேவைகளையும், அபிவிருத்திகளையும் முன்னெடுத்திருந்தது.
எனினும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்க் கட்சியில் அமர்ந்த பின்னர், பெருந்தோட்ட நிறுவனங்கள் அனைத்தும் தங்களது அதிகாரத்தினையும் ஆதிக்கத்தினையும் வலுப்படுத்திக்கொண்டுள்ளது.
மனிதவள அபிவிருத்தி நிதியத்தினை பொருத்தமட்டில் அது பெருந்தோட்ட நிறுவனங்களின் இயந்திரமாகும். அது மக்களுடைய இயந்திரமல்ல என்பதனால் நேரடியாகவும் சுதந்திரமாகவும் மக்களுடைய சேவைகளை இலகுப்படுத்தி செய்துக்கொள்வதற்கு அமைவாக புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கொண்டுவந்திருந்தார்கள்.
குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் தங்களுடைய வீடுகளை கட்டுவதற்குகூட தோட்ட முகாமையாளரிடம் அனுமதி பெறக்கூடியதாக உள்ளது. ஆனால் இந்த புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை கொண்டு நேரடியாக சகல பிரச்சினைகளுக்கும் ஒரு காத்திரமான தீர்வினை பெற்றுக்கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும்.
மேலும் நாங்கள் எங்களது தொழிற்சங்க பலத்தினைக்கொண்டு பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளோம். ஆனால் தற்போதைய அரசானது இதில் 10 சதவிகிதம் கூட நிறைவேற்றியுள்ளதென்றால் அது கேள்விக்குறியே!.
மேலும் நேரடியாக காணி உரிமை, வீடுகளை கட்டுவதற்கான அனுமதி பெறுவது என்பன இந்த புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை கொண்டு செய்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும். அதாவது நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை போன்று சுயாதீனமாக நேரடியாக இயங்கக்கூடிய ஒரு அதிகார சபையாகும்.
இந்த புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை சரியாக இயங்குவதில்லை என்றும் அதனால் குறித்த அதிகார சபையினை மூடுவதாக அரசாங்கம் எடுக்குக் தீர்மானமானது வேடிக்கையான விடயமாகும்.
புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபைக்கு திறைச்சேரியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்தால் மாத்திரமே இயக்க முடியும். மாறாக நிதி இலாமல் எவ்வாறு கொண்டு நடாத்த முடியும்?
மேலும் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் பலம், அதிகாரம் என்னவென்று ஜனாதிபதிக்கு தெரியாமல் இவ்வாறு செயற்படுகின்றார். இதன் காரணமாகவே இது முறையாக இயங்குவதில்லை என்றும், இதனை அமைச்சின் ஒரு பிரிவாக மாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக ஏனைய நிறுவனங்கள் போன்று அல்ல புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையானது.
பிரதி அமைச்சரும் மலையக ஆளுங்கட்சி பிரதிநிதிகளும் உண்மைக்கும் வெட்கப்பட வேண்டும். ஏனென்றால் மலையக மக்கள் அதிகப்படியான நம்பிக்கையில் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பி உள்ளார்கள். மக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் தீர்த்து வைப்பதற்கும் அதற்கான பதில் வழங்குவதற்கும் திறானி அற்றவர்களாகவும் முதுகெழும்பு இல்லாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.
பெருந்தோட்ட மக்களின் சம்பள விடயத்தில் கூட எங்களை கடுமையாக விமர்சித்தார்கள். ஆனால் இன்று ஒரு ரூபாய் கூட பெற்றுக்கொடுக்க முடியாதவர்களாக ஆளும் மலையக பிரதிகள் இருக்கின்றார்கள்.
குறிப்பாக இன்றைய சூல்நிலையில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஆளும் கட்சியில் யாரும் அமைச்சரைவையில் இல்லை. ஆகையால் இந்த புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை இல்லாமலாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் தவறான செயற்பாடாகவும் இதனை நான் பார்க்கின்றேன்.
குறைந்தளவிலான செலவீனங்களை கட்டுப்படுத்துவதற்காகவும், சேமிப்பதற்காகவும் அனைத்து நிறுவனங்களை இல்லாமல் செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாது. உதாரணமாக இலங்கை மின்சார சபையினை எடுத்துக்கொள்ளலாம்.
இன்றைய இளைஞர் யுவதிகளின் மத்தியில் அதிகப்படியான ஆதங்கங்கள் இருக்கின்றது. அவை நியாயமானதாகவும் இருக்கின்றது. ஆனால் இந்த ஆதங்கங்களை ஆயுதமாக பயண்படுத்தி நாட்டை இந்த அரசாங்கம் சீரலிக்கின்றார்கள்.
இது தொடர்பாக இறுதியாக நான் ஒன்றை கூறிக்கொள்கின்றேன், மலையக மக்கள் மீது உண்மையாக அக்கறையும் தேவைப்பாடும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்புக்கு இருக்குமாயின் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை நீக்குவதான விடயத்திற்கு எதிராக ஒரு அறிக்கையினை வெளியிட வேண்டும்.” – என்றார்.