மலையக சமூகத்தை சந்தா இல்லாத புதிய அரசியல் தொழிற்சங்க கலாசாரத்தை நோக்கி ஊக்குவிப்போம் – பழனி விஜயகுமார்

மலையகத்தில் புதிய அரசியல் கலாசாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் தொழிற்சங்க சந்தா இல்லாத அரசியல் கலாசாரத்தை ஊக்குவிக்க அனைவரும் முற்போக்காக சிந்தித்து ஒன்றுதிரள வேண்டும் என சிரேஸ்ட ஊடகவியலாளரும் மலையக அரசியல் சமூக செயற்பாட்டாளருமான பழனி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க சந்தா தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கருத்து வௌியிட்டுள்ள பழனி விஜயகுமார்,

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயம் கூட்டு ஒப்பந்தந்திற்கு அப்பால் சென்று சம்பள நிர்ணய சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க விடயமாகும். கூட்டு ஒப்பந்தத்தில் காணப்படும் நன்மை தீமைகளுக்கு அப்பால் குறிப்பிட்ட ஒருசில தொழிற்சங்கங்களின் ஆதிக்கத்தில் இருந்து தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதன் மற்றுமொரு அங்கமாகவே இந்த சந்தா நீக்கம் என்ற விடயத்தை பார்க்க முடிகிறது.

கூட்டு ஒப்பந்தம் செயலிழந்துள்ளதால் தொழிற்சங்க சந்தாவை அறவிட சில கம்பனிகள் மறுத்துள்ளனர். இதனால் மலையகத்தில் உள்ள பல தொற்சங்கங்களுக்கு இம்முறை சந்தா பணம் சென்றடையவில்லை. இந்த விடயத்திற்கு சில தொழிற்சங்கங்கள் கண்டனத்தை வௌியிட்டுள்ளன. சில தொழிற்சங்கங்கள் வரவேற்றுள்ளன. சில தொழிற்சங்கங்கள் மறைமுகமாக கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் சந்தா அறவிடுவதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

மலையகத்தில் சுதந்திரமாக சிந்தித்து அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கு மக்களுக்கு ஒரு தடையாக இந்த தொழிற்சங்கங்கள் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக தேர்தல் காலத்தில் குறிப்பிட்ட தொழிற்சங்கத்திற்கு சந்தா செலுத்தினால் வாக்கும் அதே தொழிற்சங்கத்திற்கே போட வேண்டும் என்ற நிலை இருந்து வருகிறது. இதனால் சேவை மற்றும் தேவை அடிப்படையில் சிந்தித்து வாக்களிக்கும் சுதந்திரத்தை அல்லது உரிமையை தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலானோரும் இழக்கின்றனர்.

இந்த நிலைமை மலையகத்தில் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதற்கு இந்த சந்தா சிக்கலில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். அப்போது மக்கள் சுயமாக சிந்தித்து அரசியல் இருப்பை, அபிவிருத்தியை, உரிமைகளை முன்னிலைப்படுத்தி வாக்குகளை பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும். தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சியாகவும் இயங்குவதால் அவர்களது முன்னுரிமை அரசியல் கட்சி சார்ந்தே அமைந்து விடுகிறது. தொழிற்சங்கத்தை தங்களது தேர்தல் அரசியல் பலத்திற்கு பயன்படுத்தும் நிலைமை உருவாகி உள்ளது.

இவ்வாறான பின்னணியில் மலையகத்தின் எதிர்கால சமூகத்தை சுயசிந்தனை அரசியலில் ஈடுபடுத்தும் வகையில் சந்தா அற்ற அரசியல் கலாசாரத்தை உருவாக்கிட அனைவரும் முற்போக்கு சிந்தனையுடன் முன்வர வேண்டும். தொழிற்சங்கத்தை ஒரு சேவை அடிப்படையில் எவ்வாறு முன்னோக்கிக் கொண்டு செல்வது என்ற கருத்தாடலை உருவாக்கலாம். அதன் அடிப்படையில் தொழிலாளர்களின் தொழில் உரிமைகளுக்கு குரல் கொடுக்கலாம். முயற்சி செய்தால் இது சாத்தியப்படும்.

ஆகவே தொழிற்சங்க சந்தா விடயத்தில் மலையக தொழிற்சங்கங்கள் கடந்த தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை நினைத்துப் பார்க்க வேண்டும். குறிப்பாக கடந்த தேர்தலுக்கு முன் ஏற்பட்ட கொரோனா காலத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக தொழிலாளர் முன்னணி, தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் போன்ற பிரதான தொழிற்சங்கங்களின் தலைவர்கள் சந்தாவை நிறுத்துவதாக அறிவித்தனர்.

அந்த அறிவிப்பின் பின்னர் தற்காலிகமாக சந்தா நிறுத்தப்பட்டதே தவிர பின்னர் அது வழமைபோல அறவிடப்பட்டது. தற்போது மீண்டும் சந்தா நிறுத்தம் கதையும் கொரோனாவும் களத்திற்கு வந்துள்ளதால் இம்முறை சந்தா நிறுத்தத்தை நிரந்தரமாக்கிடவும் கொரோனா தொற்றை முழுமையாக விரட்டி அழித்திடவும் மலையக சமூகத்தின் பெயரால் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுபபோம்” என பழனி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Latest Articles