இலங்கையில் கடந்த தசாப்தங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காக சுயாதீன விசேட சட்டவாதியின் பங்கேற்புடன்கூடிய பிரத்தியேக நீதிப்பொறிமுறை ஸ்தாபிக்கப்பட வேண்டும். மலையகத் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.
இவ்வாறு இலங்கையை வலியுறுத்தியுள்ளார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனீவாவில் ஆரம்பமானது.
இதன்போது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான தனது எழுத்துமூல அறிக்கையின் உள்ளடக்கத்தை மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டார்.
இதற்கமைய கடந்தகால மீறல்கள் மற்றும் வன்முறைகளாலும், தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கினாலும் உருவான காயங்களை ஆற்றுவதற்கும், அவற்றிலிருந்து மீள்வதற்கும் இலங்கைக்கு தற்போது வரலாற்று முக்கியத்தும் மிக்க வகையில் வாய்ப்பு கிட்டியிருப்பதாக சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அண்மையில் தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது முன்னெப்போதுமில்லாத வகையில் சீரான புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக அரசாங்கம் வாக்குறுதியளித்ததாகவும், அவ்வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் அளித்து அவை உரியவாறு நிறைவேற்றப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதேபோன்று எதிர்வருங்காலங்களில் நாட்டில் நிலையான நல்லிணக்கத்தையும் அமைதியையும் கட்டியெழுப்புவதற்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதி நிலைநாட்டப்படவேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்ட வோல்கர் டேர்க், இலங்கைக்கான விஜயத்தின்போது கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் துயரத்தையும், அத்துமீறல்களையும் அனுபவித்துவருவதாகவும், செம்மணி மனிதப்புதைகுழியைப் பார்வையிடச்சென்றபோது அங்கிருந்தவர்கள் தாம் முகங்கொடுத்துவரும் துன்பத்தைத் தன்னிடம் முறையிட்டதாகவும் தெரிவித்தார்.
அதுமாத்திரமன்றி தெற்கைச்சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவருக்காக நீண்டகாலமாகக் காத்திருப்பதாகத் தன்னிடம் கூறியதாகவும் குறிப்பிட்ட அவர், எனவே தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, நீதி வழங்கப்படவேண்டும் என்றும் கூறினார்.
மேலும் ‘பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகம் உடன் இடைநிறுத்தப்படவேண்டும். நிகழ்நிலைக்காப்புச்சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டம், அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான உத்தேச சட்ட வரைவு மற்றும் தனிநபர் தரவுப்பாதுகாப்பு தொடர்பான உத்தேச சட்ட வரைவு என்பன உள்ளடங்கலாக மீறல்களுக்கு வழிவகுக்கக்கூடிய சட்டங்கள் உரிய நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்படவேண்டும்.
வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் காணி சுவீகரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இயங்கிவரும் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மீதான ஒடுக்குமுறைகளும், அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன. அவை உடனடியாக முடிவுக்குக்கொண்டுவரப்படவேண்டும். ” – எனவும் மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தினார்.
அதுமாத்திரமன்றி பாதுகாப்புத்துறை மறுசீரமைக்கப்படவேண்டும். வட, கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கம் முடிவுக்குக்கொண்டுவரப்படுவதுடன் தனியாருக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்படவேண்டும். மலையகத் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்’ என்றும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தெரிவித்தார்.