மலையக மக்களுக்கான காணி உரிமை: யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அறிக்கை!

மலையக மக்கள் சிறுபான்மையினமா?  தேசிய இனமா?  இந்திய வம்சாவழியா? மலையகத் தமிழரா? என யாழ் பல்கலைக்கழக மாணவர்  ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது.

மலையக மக்களின் காணி உரிமை பிரச்சனை தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சனிக்கிழமை (21) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லகீதரன், யாழ்ப்பாண பல்கலைக்கழக மலையக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மைக்கல் பெவன், கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் உப தலைவர் திருச்செல்வம் , மற்றும் மலையக மாணவர் ஒன்றியத்தின் உப தலைவர் லக்சரண், முகாமைத்துவ பீடம், விஞ்ஞான பீடம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டு  மலையக மக்களின் காணி உரிமை  தொடர்பான கருத்துக்களை ஊடகங்களுக்கு முன்வைத்தனர்.

மலையக மக்களின் காணி உரிமை பிரச்சனை தொடர்பான  ஊடக அறிக்கையில்,

மலையக மக்களின் அடிப்படை உரிமைகளில் காணி உரிமையும் முக்கியமான தொன்றாக இருக்கின்றது. நீண்ட காலமாகவே நிலத்திற்கான உரிமையற்ற ஒரு சமூகமாக மலையக மக்கள் இருப்பதோடு எங்கள் உறவுகளின் தலைமுறைக்கே நில உரிமை என்பது மறுக்கப்பட்ட இருளாகவே காணப்படுகின்றது.

அதற்கான வெளிச்சம் இதுவரையிலும் எட்டப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. மனிதர்கள் காலடி படாத காடுகளை அழித்து அதில் பெருந்தோட்டங்களை உருவாக்கி இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு உழைப்பை வழங்கிய மலையக மக்களின் விழித்தோன்றல்களுக்கு அடிப்படையான காணி உரிமை என்பது மறுக்கப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது.

உண்மையிலேயே இது நீதியானதா? இதற்கான நீதியை நிலைநாட்ட அரசாங்கங்களும் பெருந்தோட்ட கம்பெனிகளும் அதற்கான முற்றுமுழுதான முனைப்போடு தொழிற்சங்கங்களும் முன்வருவதில்லை என்பது கேள்விக்குறிய விடயமாகும்.

மக்கள் அவர்களுக்கான காணி உரிமையை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு போராட்டங்களை அன்று தொட்டு இன்று வரை மேற்கொண்டு தான் வருகிறார்கள். ஆனாலும் இன்று வரை தீர்வு காண முடியாத தன்மையே காணப்படுகின்றது. காணி உரிமைக்கான முதலாவது போராட்டம் 1946 ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி மலையக மக்களின் முதலாவது காணிக்கான போராட்டம்.

கேகாலையின் உருலவள்ளி பெருந்தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. அப்பெருந்தோட்டத்தில் அம்மக்களின் 400 ஏக்கர் குடியிருப்பு நிலம் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமது காணிகளைப் பாதுகாக்க முன்னெடுக்கப்பட்ட போராட்டமாக அது அமைந்திருந்தது.

இலங்கைப் பெருந்தோட்டங்களில் உள்ள இந்திய வம்சாவளித் தொழிலாளர்களின் காணி உரிமைகளைக் கோரி இப்போராட்டத்தில் கேகாலை மற்றும் களனிப் பள்ளத்தாக்கு பிரதேசங்களைச் சேர்ந்த 125,000 த்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றிருந்தனர்.

1972 ஆம் ஆண்டின் காணிச் சீர்திருத்தச் சட்டம் குடியேற்றங்கள் உருவாகவும் காணிக் கையகப்படுத்தல்கள் நிகழவும் வழிவகுத்தது. தொடர்ச்சியான காணிக் கையகப்படுத்தல்கள் போராட்டங்களுக்கு வழிவகுத்தன. டெவோன் தோட்டத்தின் 7,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராக மே 11, 1977 அன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது சிவானு லட்சுமணன் என்ற இளம் தோட்டத்தொழிலாளி பொலிசாரினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதன் விளைவாக பெருந்தோட்ட நிலங்களை பறிமுதல் செய்யும் திட்டம் கைவிடப்பட்டது. அதே போன்று, 2000 ஆம் ஆண்டில், மேல் கொத்மலை நீர் மின்சார திட்டத்துக்காக அப்பிரதேச மக்களை வெளியேற்றும் முன்னெடுப்பு தொடர்ச்சியான மக்கள் போராட்டம் காரணமாக கைவிடப்பட்டது.

2014 ஆம் ஆண்டு பதுளை மாவட்டத்தின் ஹபுத்தளை பிரதேசத்தில் மிரியாபேத்த பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவு பேரழிவின் பின்னர், மலைநாட்டில் வாழும் மக்களுக்கு குடியிருப்புக்கு பொருத்தமான இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க கோரிக்கை நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும் முன்வைக்கப்பட்டது.

காணி உரிமைகள் மற்றும் ஏனைய உரிமைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் மேற்கொண்ட தியாகங்கள் அளப்பெரியன. மலையக மக்களின் காணி உரிமைக்கான அங்கீகாரத்தை பாதுகாக்க பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதும், அவர்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதுடன் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மீறல்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. எனவே, இந்தக் கோரிக்கை இலங்கையின் உரையாடலில் உள்ளடக்கப்படும் ஒரு தேவை தற்போது எழுந்துள்ளது.

மேலும் மலையக மக்களுக்கு பெருந்தோட்டக் காணிகளை வழங்குவதற்கு பெருந்தோட்டக் கம்பெனிகளுக்கும் அரச நிறுவனங்களுக்கும் இடையே காணப்படுகின்ற குத்தகை ஒப்பந்தம் காரணமாக காணி உரிமை மறுக்கப்பட்டு வருகின்றது.

அத்தோடு பெருந்தோட்ட கம்பெனிகளுடன் எவ்வித தொடர்புமற்ற காணி சீர்திருத்த ஆணைக்குழு (JEDB),(SLSPC),(TRI) ஆகிய அரச நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள பெருந்தோட்ட காணிகளை அவற்றில் வாழும் மலையக மக்களுக்கு குடியிருப்பு தேவைக்காக அனுமதிப்பத்திரம், அழைப்பு பத்திரம், அளிப்பு பத்திரம் அறுதியீட்டு உறுதி ஊடாக வழங்குவதற்கு இதுவரையில் எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மையாகும்.

மலையக மக்களுக்கு குடியிருப்புக்காக காணி வழங்கப்படும் பொழுது மாத்திரம் மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட தேயிலைச் செடிகளுக்கும் ரப்பர் மரங்களுக்கும் அம்மக்களை விட அதிக மதிப்பு வழங்கப்பட்டு தேயிலைச் செடிகளையும் ரப்பர் மரங்களையும் காப்பாற்றுவதாக கூறி அவர்கள் தொடர்ந்து லயங்களிலே வாழவைக்கப்படுகின்றனர்.

மலையக சமூகங்களின் காணி உரிமைகளை உறுதி செய்வதற்காகவும் காணியற்றவர்களுக்காக காணிகளைக் கோருவதற்காக ஒத்த சிந்தனையுள்ளவர்களை ஒன்று திரட்டவும் ஒரு தேசிய தினமாக “காணி தினம்” இருக்கின்றது.

இதன் அடிப்படையில் நான்காவது காணி தினத்தினை நேற்று சனிக்கிழமை (21) அட்டன் நகரில் முன்னெடுப்பதற்கு “நிலமற்றோர்க்கு நிலம்” எனும் தொணிப்பொருளில் “மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் ஏற்பாடுகளை செய்து வருவதாக அறியப்படுகிறது.

மலையக மக்களின் காணி பிரச்சினை இன்னும் ஒரு கொள்கை ரீதியில் தேசிய வேலைத் திட்டத்துடன் முன்னெடுக்கப்படாத நிலையில், தற்போது அதற்கான அழுத்தங்கள் பாரியளவில் எழுந்திருப்பது முக்கியமான விடயமாகும்.

நீண்ட காலமாக மக்களின் தேவையாகவும் மக்களின் நிலம் சார்ந்த இருப்பியலை தக்க வைத்து கொள்வதற்கு இவ்விடயத்தில் முன்னேடுப்புக்களை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இனிமேல் சிறிதும் பின் நிற்காது முற்றுமுழுதாக ஆதரவளிக்கும் என்று தெரிவித்துக்கொள்கின்றோம் என்றுள்ளது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles