பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொய்யுரைத்து வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனவே, பூச்சாண்டி காட்டாது, தோட்டத் தொழிலாளர்களுக்கு தோட்டங்களை பிரித்து கொடுத்து அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அக்கரபத்தனை பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நுவரெலியா மாவட்டத்தில் உள்ளாட்சிசபைகளின் எண்ணிக்கையை தமிழ் முற்போக்கு கூட்டணியே அதிகரித்து கொடுத்தது. வேறு கட்சிகள் இதனை செய்யவில்லை . எனினும், கடந்தமுறை மக்கள் எமக்கு ஆணை வழங்கவில்லை. இம்முறை அதனை வழங்குவார்கள் என நம்புகின்றோம்.
தற்போதைய அரசாங்கம் பொய்யுரைத்தே வாக்குகளைப் பெற்றது.
ஆட்சிக்கு வந்த பிறகு மலையக மக்களுக்காக எதையும் செய்யவில்லை. வரவு செலவு திட்டத்தில் மலையக மக்களுக்கு 7, 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி கூறியுள்ளார். அதில் 4500 மில்லியன் ரூபா நிதி இந்திய அரசாங்கம் நன்கொடையாக வழங்கியதாகும். எனவே, நாங்கள் இந்தியா அரசாங்கத்திற்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டுமே தவிர இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல தேவையில்லை.
ஜனாதிபதியின் வரவு- செலவுத் திட்ட கடைசி நாள் உரையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பற்றி எதுவும் கூறப்படவில்லை. இந்த 1,700 ரூபா கதையென்பது பொய்யாகும். கம்பனிகள் வழக்குக்கு செல்வார்கள். எனவே, பூச்சாண்டி காட்டாமல் எமது மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும். எமது மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டுமெனில் 10 பேர்ச்சஸ் காணியை வழங்க வேண்டும்.” – என்றார்.
பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்