வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையகத் தமிழ் மக்களை ஏமாற்றி உள்ள அரசாங்கத்துக்கு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மலையகத் தமிழ் மக்கள் தக்க பதிலடி கொடுப்பர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம் கொட்டகலை ஆர்.டி.எம். மண்டபத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஸ்ணன், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சோ. ஸ்ரீதரன், தொ.தே. சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ஜி. நகுலேஸ்வரன் உட்பட வேட்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் அவர் தொடர்ந்து பேசுகையில்,
ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் காலத்தில் ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. அரிசி மாபியாவை ஒழிப்போம், அபிவிருத்திகளை மேற்கொள்வோம் என்றார்கள் எதனையும் செய்ய முடியவில்லை,, மாறாக அரசி, தேங்காய் முதலான அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எங்கர் பால்மாவின் விலையும் கூடியுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் மலையக அபிவிருத்திக்கு 9000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினாலும், 4800 மில்லியன் ரூபா இந்திய அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டதாகும். உண்மையில் 2200 மில்லியன் மட்டுமே அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒரு வீட்டை நிர்மாணிக்க 10 இலட்ச தேவைப்பட்டது. ஆனால், இன்று 30 இலட்சம் தேவைப்படுகின்றது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்க கம்பனிகளுக்கு அழுத்தம் தரப் போவதாகக் கூறப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணிலும் இதையேதான் கூறியிருந்தார். ஆனால், கம்பனிகள் அசைந்து கொடுக்கவில்லை. இம்முறையும் சம்பள உயர்வை கம்பனிகள் தான் தீர்மானிக்க வேண்டியிருக்கும். எனவே, தொழிலாளர்கள் அரசாங்கதின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி இனிமேலும் ஏமாறத் தயாரில்லை என்பதை உள்ளூராட்சித் தேர்தல் எடுத்துக் காட்டும்.
மலையகத்தைச் சீரழித்தமைக்காக முன்னாள் அரசியல்வாதிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். தேயிலைத் தொழிற்சாலைகளை எரித்து தோட்டத் தொழிலாளர்ர்களின் பொருளாதரத்தைச் சீர்குலைத்தமைக்கு ஜே.வி.பி.தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்தத் தேர்தலில் அனாவசியமாக பணத்தைச் செலவு செய்து வாக்குகளைப் பெறுவதற்கு வேட்பாளர்கள் முயற்சிக்கக்கூடாது.சிக்கனமாக செலவு செய்தும் வீடு வீடாகச் சென்றும், அரசாங்கத்தின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஒற்றுமையை நிலைநாட்டியும் வாக்குகளைச் சேகரிக்க வேண்டும்.
நானும், மனோ, இராதாவும் அமைச்சு அதிகாரத்தில் இருந்த காலத்தில் ஊழல் செய்யவில்லை. நேர்மையாக மக்களுக்கு சேவை செய்துள்ளோம். எதிர்காலத்தில் சேவை செய்யவும் தயாராக இருக்கின்றோம். உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றி கடந்த தேர்தலில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவோம் என்றார்.
