‘மாகாணசபை முறைமையை நீக்குவது குறித்து இன்னும் முடிவு இல்லை’

மாகாணசபை முறைமையை இல்லாதொழிப்பது தொடர்பில் அரசாங்கம் இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை – என்று ஶ்ரீலங்கா பொதுஜனவின் தலைவரும், அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எஸ்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது, மாகாணசபை முறைமை நீக்கப்படவேண்டும் என முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் குறித்து எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாகாணசை முறைமை தொடர்பில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்தில் எந்தவொரு விடயமும் இல்லை. 20 ஐ நிறைவேற்றிய பின்னர் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி ஆரம்பமாகும். அப்போது மாகாணசபை முறைமை தொடர்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பிலும் ஆழமாக ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும்.

நாட்டில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மாகாணசபைத் தேர்தல் நடைபெறவில்லை. மாகாணசபைகள் இயங்காமலேயே எல்லாம் நடைபெறுகின்றன. எனவே, மாகாணசபை முறைமை தேவைதான என்ற கருத்தும் எழுந்துள்ளது. ஆனால் இது பற்றி அரசாங்கம் இன்னும் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை.
வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கான தீர்வாகவே மாகாணசபை முறைமை கொண்டுவர்பட்டது.

ஆனாலும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து மாகாணசபைத் தேர்தலை பிற்போடுவதற்கு கூட்டமைப்பு துணைநின்றது. தேர்தலை நடத்துமாறு கூட்டமைப்பினர் உரிய அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles