“தேசிய மக்கள் சக்தியால் மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான மக்கள் ஆணை எதுவும் பெறப்படவில்லை. அதற்கான முயற்சியில் தேசிய மக்கள் சக்தி ஈடுபடவும் இல்லை. ஆனால், மாகாண சபையையும் விட ஒரு வலிமையான சபை – அனைத்து மக்களுக்கும் சமனான அந்தஸ்தை வழங்கக்கூடிய கூடிய ஓர் அரசமைப்பு தேவை. அதில் மாகாண சபை இருக்குமா, இல்லையா என்பதே விடயம். எனவே, இதுவரையும் மாகாண சபையை நீக்குவதற்கான எந்தவிதமான முன்மொழிவுகளும் முன்வைக்கப்படவில்லை.”
– இவ்வாறு வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சரும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் ஐஸ்டினா முரளிதரனின் ஒருங்கிணைப்பில் மாவட்ட செயலக மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முஹம்மட் சாலி நளீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரான பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இங்கு பல்வேறுபட்ட விடயங்கள் பேசப்பட்டன. அதற்கு ஆக்கபூர்வமான பதில்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அனர்தம் தொடர்பாக சகல இடங்களில் இன்னும் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட்டிருக்கலாம் என்ற பல்வேறுபட்ட விமர்சனங்கள் இடம்பெற்றிருந்தாலும் ஆக்கபூர்வமாகச் செயற்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி.
இனிவரும் காலத்தில் இன்னும் எங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. அதனை உணர்ந்து செய்ய வேண்டிய கடமை இருக்கின்றது. இருந்தபோதும் கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்டிருந்த முறைசாராத அபிவிருத்திகள் இந்த அனர்த்தத்துக்கு ஒரு முக்கியமான காரணியாகும்.
எனவே, இது தொடர்பாக நிரந்தரமான தீர்வை நோக்கிப் போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இனிவரும் காலங்களில் அபிவிருத்தி மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, அபிவிருத்திப் பணிகள் எந்தவகையிலும் அன்றாட வாழ்க்கைக்குப் பாதகங்களை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்க முடியாது.
அபிவிருத்தி நடவடிக்கைகளால் அன்றாட வாழ்கைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றால் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வோம். அதுமாத்திரம் அல்ல, இங்கு சட்டவிரோதமான – விதிமுறைக்கும் அப்பாற்பட்ட – மணல் அகழ்வு தொடர்பாகப் பேசப்பட்டுள்ளது. இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்னர் நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தாலும் சில அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனமும் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே, உயர் அதிகாரிகளைக் கொண்டு தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர்வரும் காலங்களிலும் விதிமுறைக்கு முரணாக மண் அகழ்வுகள் இடம்பெறுமாயின் இது தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்குமாறு கேட்டுள்ளோம்.
இந்த அனர்த்தங்கள் மூலமாக கூட சரியான பாடங்களை கற்றுக்கொள்ளாவிட்டால் இது ஒரு பரவலான பாதிப்புக்கு வழியமைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனவே, இந்த விடயம் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் இன்னும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
வைத்தியசாலைகள், அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களின் நஷ்டஈடுகள், விவசாய நிலங்கள் தொடர்பான சரியான மதிப்பீடுகள் உட்பட பல்வேறு தரப்பட்ட விடயங்கள் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.
தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தீர்வுகள் எட்ப்படாத விடயங்கள் தொடர்பாக அமைச்சு மட்டத்தில் தீர்வுகளை எட்டுவதற்காக எமது தலையீடு இருக்கும்.
1978 அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ரில்வின் சில்வா கருத்துத் தெரிவித்துள்ளார். அதாவது இந்த அரசமைப்பை மாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது என்று அவர் கூறியுள்ளார். மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான மக்கள் ஆணை எதுவும் பெறப்படவில்லை. இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அவர் அதில் குறிப்பிட்ட விடயம் இந்த மாகாண சபை அலகு போதியதல்ல, எனவே, இந்த விடயத்தில் ஒரு தீர்வை நோக்கிப் போக வேண்டும்.
அது மாத்திரமல்ல, புதிய அரசியல் யாப்பை முன்வைக்கும்போது 13 ஆம் திருத்தச் சட்டம் அல்ல முதலாவது திருத்தம் தொடக்கம் 20 வரையிலான திருத்தங்கள் மாற்றப்பட்டு ஒரு புதிய அரசியல் அமைப்பு முன்வைக்கப்படவுள்ளது.
இந்த விடயம் பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்ட விடயமாக நாங்கள் பார்க்கின்றோம். ஆகவே, தேசிய மக்கள் சக்தியால் மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான மக்கள் ஆணை எதுவும் பெறப்படவில்லை. அதற்கான முயற்சியில் தேசிய மக்கள் சக்தி ஈடுபடவும் இல்லை. ஆனால், மாகாண சபையையும் விட ஒரு வலிமையான சபை – அனைத்து மக்களுக்கும் சமனான அந்தஸ்தை வழங்கக்கூடிய கூடிய ஓர் அரசமைப்பு தேவை. அதில் மாகாண சபை இருக்குமா, இல்லையா என்பதே விடயம். எனவே, இதுவரையும் மாகாண சபையை நீக்குவதற்கான எந்தவிதமான முன்மொழிவுகளும் முன்வைக்கப்படவில்லை.” – என்றார்.
இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரச அதிபர்களான சுதர்ஷனி சிறிகாந்த், நவரூபரஞ்சனி முகுந்தன் (காணி), மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், ஆணையாளர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள், பிராந்திய சுகாதார சேவைகள் அதிகாரிகள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், மீன்பிடி, விவசாயத் திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 
		 
                                    