இம்முறை மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் வகையில் பழைய தேர்தல் முறையிலாவது மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது பொருத்தமானது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் பரிந்துரைத்தது.

சுதந்திரக் கட்சி சார்பில் பாராளுமன்ற விசேட குழுவில் சாட்சியமளித்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிடுகையில், நீண்டகாலமாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமையால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் அடுத்த வருட முதலாவது காலாண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகக் கூடியது 5500 ஆக வரையறுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை நீடிப்பது பொருத்தமற்றது என அமைச்சர் மஹிந்த அமரவீர இங்கு சுட்டிக்காட்டினார். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்பதே பொது மக்களின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் பதவிச்சத்தியம் செய்யும்வரை குறித்த நிறுவனங்களின் அதிகாரம் ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா இக்குழு முன்னிலையில் சுட்டிக்காட்டினார்.
தற்போதுள்ள சட்டத்தின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என சட்டமா அதிபர் கருதுவதாகவும், அதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் பாராளுமன்ற விசேட குழுவின் தலைவர் சபை முதல்வர், அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.










