மாணவிகள் மூவரிடம் தவறாக நடப்பதற்கு முற்பட்டார் எனக் கூறப்படும் விஞ்ஞான பாட ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன், வட்டவளை பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் சேவையாற்றும் 44 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இன்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தரம் 10 இல் கல்வி பயிலும் மூன்று மாணவிகளுக்கு குறித்த ஆசிரியர் தவறான நோக்கில் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். இதற்கு மாணவிகள் பதிலளிக்கவில்லை என தெரியவருகின்றது.
இதனையடுத்து பாலியல் ரீதியில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் உளரீதியில் பாதிக்கப்பட்ட மாணவரிகள் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த முறைப்பாட்டுக்கமையவே குறித்த ஆசிரியர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விஞ்ஞான பாட ஆசிரியர் திருமணம் ஆனவர் எனவும், அவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஹட்டன், நீதவான் நீதிமன்றத்தில் அவர் முற்படுத்தப்படவுள்ளார்.
