மாத்தளை பொலிஸ் அதிகாரப் பிரிவில் இவ் வருடத்தின் கடந்த 06 மாத காலத்தினுள் 61 குற்றச் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும், இவற்றில் சில குற்றச் செயல்கள் தொடர்பில் சட்டபூர்வ நடவடிக்கைகளின் மூலம் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் மாத்தளை தலைமையக பொலிஸ் உயரதிகாரி உபுல் குணவர்தன தெரிவித்தார்.
போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை, வழிப்பறி, மாத்தளை நகரில் பெண்களின் தங்கச் சங்கிலிகள் அபகரிப்பு முதலான குற்றச் செயல்கள் மேற்படி குற்றச் செயல்களில் அடங்குகின்றன.
வீதியில் செல்லும் பெண்களின் கழுத்துச் சங்கிலிகளைப் பறிக்கும் சம்பவங்கள் மேற்படி நகரில் சர்வசாதாரணமாக இடம் பெற்று வருவது தொடர்பில் மாத்தளை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.