சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையைடுத்து போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
அதன்படி, சென்னை விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் விமான பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னையில் முற்று முழுதாக போக்குவரத்தில் தடைகள் ஏற்றப்பட்டுள்ளன.
பொதுமக்கள் வீட்டினுள் இருந்தே தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு உயர் அதிகாரிகள் தெரிவிப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு பிரதேசங்களில் வெள்ள நிலைமை காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, சென்னை, பள்ளிக்கரணை , மேடவாக்கம் சுற்றுவட்டாரப் பகுதி வெள்ளத்தால் மூழ்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பள்ளிக்கரணை பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் , இதன் காரணமாக தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இந்நிலையில், 10க்கும் மேற்பட்ட கார்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் தகவலறிந்த தீயணைப்பு பிரிவினர் கார்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.