” தற்போதைய அரசாங்கம் வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் உருவாக்கித் தருவோம் என்ற வாக்குறுதிப் பத்திரத்தின் பேரிலேயே ஆட்சிக்கு வந்தது.
எனினும், வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் உருவாக்குவதற்குப் பதிலாக, வரிய நாட்டையும் ஏழ்மையான வாழ்க்கையையும் உருவாக்கி வருகின்றது. அவசர அவசரமாக மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றது.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
” கடந்த தேர்தல்கள் பிரச்சார மேடைகள் ஒவ்வொன்றிலும் தற்போதைய ஆளும் தரப்பு உறுப்பினர்கள் ரூ.9000 மின்சாரக் கட்டணத்தை ரூ. 6000 ஆகவும் ரூ. 3000 மின்சாரக் கட்டணத்தை ரூ. 2000 ஆகவும், 33% ஆல் இவற்றைக் குறைப்போம் என முழங்கினர்.
ஆட்சிக்கு வந்த பிற்பாடு மேடைகளில் பிரஸ்தாபித்த வாக்குறுதி முழக்கங்களை மறந்துவிட்டு, இன்று நாளையே மின்சாரக் கட்டணத்தை 11.57% ஆல் அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். இவர்கள் பெற்ற மக்கள் ஆணையை இன்று காட்டிக் கொடுத்து வருகின்றனர்.” எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.-
” மின்சாரக் கட்டணங்களை இவர்கள் குறைப்பதாகக் கூறியதால்தான் இந்நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் தற்போதைய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
ஜனாதிபதி இதை பிரசித்தமாக வெளிப்படையாகக் கூறியிருந்தார். ஆனால் இன்று, மக்கள் ஆணையால் ஆட்சிக்கு வந்துவிட்டு மக்கள் வழங்கிய ஆணையை ஏன் இவ்வாறு காட்டிக் கொடுத்து வருகின்றீர்கள் என்று இன்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்நாட்டில் மின்சார நுகர்வோரின் மனித மற்றும் அடிப்படை உரிமைகளை இந்த அரசாங்கம் மீறியுள்ளன. ஆளும் தரப்பினர் மின்சார நுகர்வோருக்கு வழங்கிய எதிர்பார்ப்புகளையும், அவர்கள் மூலம் பெற்றுக் கொண்ட மக்கள் ஆணையும் முற்றிலுமாக மீறியுள்ளனர்.
பொய்கள், ஏமாற்றுக்கள், மற்றும் வாக்குறுதிகளை மீறல் என இந்த அரசாங்கம் மின்சாரத்தை நுகரும் இந்நாட்டு மக்களை ஏமாற்றி, இன்று அவர்களை உதவியற்றோர் நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.










