மீண்டும் கூட்டமைப்பாக செயற்படப் பேசுகின்றோம்

முன்னர் ஒன்றாக இருந்த கட்சிகளை மீள ஒன்றிணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படலாமா என்பது தொடர்பில் பேசிக்கொண்டிருக்கின்றோம் என்று ரெலோவின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பெறப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் தெரிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

இதில் கலந்துகொண்ட பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுவில் ஒரு ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த ஒற்றுமை இல்லாமையினால் எமது தேசத்தில் பல மாற்றங்கள் உருவாகியுள்ளன. அது தொடர்ந்தால் இங்கு இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுவிடும்.

எனவே, இனம் சார்ந்த விடுதலையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்
என்ற வகையில் நாம் ஒன்றிணைய வேண்டும். ஒன்றிணைந்தால் மக்கள் எங்களுடன் நிற்பார்கள்.

எனவே, நாடாளுமன்றுக்குள்ளும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு அணியாகச் சேர்ந்தும் பொது விடயங்களில் ஒன்றாகக் குரல் கொடுக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.

அத்துடன் வடக்கு – கிழக்கில் முன்னர் ஒன்றாக இருந்த கட்சிகளை மீள ஒன்றிணைத்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படலாமா என்பது தொடர்பிலும் பேசிக்கொண்டிருக்கின்றோம்.

பெருவாரியான வாக்குகளைப் பெற்ற இந்த அரசின் ஜனாதிபதி பேசியபோது ஒரு மணிகூட வெளியில் இருந்து இறக்கமாட்டோம் என்று சொல்லியிருந்தார். ஆனால், இன்று நிலைமை மாறி இறக்குமதி செய்யும் சூழல் வந்துள்ளது. சர்வதேச நாணய நிதிய விடயத்தில் எந்தவொரு மறுப்பும் தெரிவிக்காமல் இவர்கள் கையொப்பம் இட்டுள்ளனர்.

எனவே, இந்த நிலைமையில் அரசு சென்றால் மீண்டும் வரிசையுகம் வரும் சந்தர்ப்பம் ஏற்படும். எனவே, அரசு நிதானமாகச் செயற்பட வேண்டும்.

இன்று சாதாரண மக்கள் கூட தேங்காய் வாங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் சூழலை மாற்ற வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles