“ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியாக நாம் இன்று பயணித்துக்
கொண்டிருக்கின்றோம். அத்துடன், தமிழ்த் தேசிய பேரவையுடன் புரிந்துணர்வு ஒன்றையும் மேற்கொண்டிருக்கின்றோம். மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன்
பேசியே முடிவு எடுப்போம்.”
– இவ்வாறு ரெலோ கட்சி நேற்று அறிவித்துள்ளது.
அத்துடன், தமது கட்சி மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட அல்லது அரசியல் ரீதியாகச் சேறு பூச வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்கள் பரப்பப்படுகின்றன என்றும் அந்தக் கட்சியின் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்தார்.
ரெலோ கட்சியின் தலைமைக் குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் நிறைவிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த சில வாரங்களாக திட்டமிட்ட வகையில் சில முகநூல்களிலும் இணையத்தளங்களிலும் எமது கட்சிக்கு எதிராக அல்லது கட்சியை களங்கப்படுத்தும் வகையில் சில ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, விமர்சனங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அது சம்பந்தமாக ஆராய்ந்திருந்தோம்.
எங்கள் கட்சி மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட அல்லது அரசியல் ரீதியாகத் திட்டமிட்டு எங்கள் கட்சியின் மீது சேறு பூச வேண்டும் என்று அல்லது அரசியல் ரீதியாக எங்களைத் தாக்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் ஊடாகவே இந்த விடயம் பிழையான ஒரு பிரசாரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. இது உண்மையா, இல்லையா என்பதை ஆராய்வதற்காகத் தலைமைக் குழுவில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த விடயங்களை ஆராய்ந்து பேராளர் மாநாட்டிலே இது சம்பந்தமான வெளிப்படுத்தலைச் செய்வார்கள்.
பொதுவாக கடந்த கால தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்குப் பின்னராகப் பல தடவைகள் எங்களுடைய கட்சி கூடி ஆராய்ந்துள்ளது. மாவட்ட ரீதியான, தொகுதி ரீதியான, வட்டார ரீதியான கட்சி கட்டமைப்பையும் இதேபோன்று தலைமைக் குழுவில் இளைஞர்களுக்காக இடைவெளியை அதிகரித்து புதியவர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் நாங்கள் எடுத்திருக்கின்றோம்.
இது சம்பந்தமாகவும் தலைமைக் குழுவில் தீர்மானிக்க முடியாது. ஆகவே, அதை நாங்கள் பேராளர் மாநாட்டிலேதான் அப்படியான மாற்றங்களையும் கொண்டுவர வேண்டும் என்ற தீர்மானத்தையும் எடுத்திருக்கின்றோம்.
பேராளர் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கின்ற கட்சியின் உறுப்பினர்களின் கைகளிலேதான் அந்த விடயங்களைக் கையளிப்போம். பேராளர் மாநாட்டை எதிர்வரும் 2026 ஜனவரிக்குள் அனைத்து மாவட்டத்தின் உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து இது சம்பந்தமான முடிவுகளை எட்டி எங்களுடைய கட்சியை மேலும் பலப்படுத்தி பயணிப்பதற்கான தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஓர் அழைப்பை விடுத்திருந்தது. அதைப் பற்றி நாங்கள் பேசியிருந்தோம். நாங்கள் அந்த முடிவை அறிவிப்பதற்கு முன்னதாக அவர்களுடைய நிபந்தனை என்ன என்பதை அறிய வேண்டும். நாங்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியாக இன்று பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இதேபோன்று தமிழ்த் தேசியப் பேரவையுடன்
நாங்கள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருப்பதால் அவர்களோடும் கலந்தாலோசிக்க வேண்டும்.
இந்த ஒற்றுமையை நாங்கள் நேசிக்கின்றோம். இந்த அரவணைப்பை நாங்கள் வரவேற்கின்றோம். அதேநேரம் இதை எப்படிச் செயற்படுத்துவது என்பது எங்களுடைய பங்காளிக் கட்சிகளோடு கலந்தாலோசித்தே
முடிவை அறிவிப்பதாக இருக்கின்றோம்.” – என்றார்.










