மீன்பிடி கப்பலை கடத்தி மூன்று மீனவர்களை கொலை செய்த வழக்கில் 7 மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி இலங்கைக் கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டவர்களை ஏற்றிச் சென்ற ‘தேஜான்’ என்ற மீன்பிடிக் கப்பல் கடத்தப்பட்டு மூன்று மீனவர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் பல மீனவர்கள் படுகாயமடைந்தனர்.
குறித்த வழக்கு இன்று (24) கொழும்பு உயர் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது நீதிபதி 7 மீனவர்களுக்கு குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வழக்கின் 10வது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த பிரதிவாதியை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்குமாறும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மரணதண்டனை விதிக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கு மேலதிகமாக, ஏனைய ஆறு குற்றச்சாட்டுகளுக்கும் பிரதிவாதிகளுக்கு 29 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, தலா 2,008,500 ரூபா அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.
மரண தண்டனைக்கு மேலதிகமாக விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 11 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
மூன்று பிரதிவாதிகள் வழக்கு விசாரணை இடம்பெற்றிருந்த காலப்பகுதியில் இறந்துவிட்டதால், 8 பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
