17 நாட்களாக நடைபெற்றுவந்த மரணப்போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்களும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட அனைவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
செங்குத்தாக துளையிடும் பணி முடிவடைந்ததும், தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு வர வசதியாக நீண்ட குழாயும் பதிக்கப்பட்டுவிட்டது. இதனால், 17 நாட்களாக இரவு பகலாக நீண்ட மீட்புப் பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டியது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் செய்திப்படி, நேற்று இரவு 8 மணியளவில் தொழிலாளர்களை வெளியே மீட்டு வரும் பணி தொடங்கியது. முதலில் ஒருவர் பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வரப்பட்டார். அடுத்த சிறிது நேரத்திலேயே ஒருவர் பின் ஒருவராக 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டு வெளியே வந்த தொழிலாளர்களை மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி மாலையிட்டு வரவேற்று, அவர்களிடம் நலம் விசாரித்தார்.
உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12-ஆம் திகதி நிலச்சரிவு ஏற்பட்டு, அதனுள் 41 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கினர்.