சனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டதன் பின்னர் அதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
அந்தக் குழு அதன் தலைவர்
பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜீத் இந்திக்க தலைமையில் இன்று (09) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்த சட்டமூலம் தொடர்பாகக் கருத்து தெரிவித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய, நாட்டின் பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, இந்த சனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தின் ஊடாக முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் எதிர்கால ஜனாதிபதிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கு வழங்கப்படும் பொருளாதார ரீதியற்ற உரித்துரிமைகளை நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர்.
ஏனைய நாடுகளில் ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள் அல்லது அரச தலைவர்களுக்கு, அவர்கள் பதவியை விட்டு விலகிய பின்னரும் சில உத்தியோகபூர்வ கடமைகள் அல்லது பொறுப்புகளில் தொடர்ந்து ஈடுபடுவதால் எமது நாட்டைப் போன்ற ஓய்வூதியங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன என்றும் அவ்வாறு எந்தவொரு உத்தியோகபூர்வ கடமையும் வழங்கப்படாத முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான ஓய்வூதியங்கள் மற்றும் பெரும் சலுகைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இந்த நீக்குதல் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
அதற்கமைய, இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய சனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் நாளை (10) பாராளுமன்றத்தில் இரண்டாவது மத்திப்பீட்டுக்காக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.எம். அஸ்லம், சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, சந்தன சூரியஆரச்சி, தர்மப்பிரிய விஜேசிங்ஹ மற்றும் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி. சூரியபண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.