‘ முரளியின் வாழ்க்கை போராட்டம் திரைப்படமாக வரட்டும்’ – மனோ

” உலக மைதானங்களிலும், பந்து வீச்சு ஆய்வுகூடங்களிலும், போராடிதான், முரளி உலக வீரராக இன்று அடையாளம் பெற்றுள்ளார். அவரது திரைப்படம், அவரது பொறுப்பற்ற அரசியலை நியாயப்படுத்தாதவரை, வந்து போகட்டும்..! ஒரு தமிழரின், ஒரு இலங்கையரின், வாழ்க்கை போராட்டம், திரைப்படமாக வரட்டும்..!” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரின் முகநூல் பதிவ வருமாறு,
“கிரிகட்டர் முரளி” பற்றிய கதை படமாக போகிறது. அதில் நடிக்க உள்ள நடிகர் “தமிழரா, இல்லையா” என்று விவாதிக்கும் அளவுக்கு விவாதம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.இதுபற்றி என் நெருங்கிய வட்டாரத்தில் கலந்துரையாடல் நடந்தது. தமிழகத்திலிருந்து அரசியல் நண்பர் ஒருவர் தொலை(யில்)பேசி என் கருத்தும் கேட்டார்.
முதலில், இப்பட திரைகதை, அரசியல் அல்ல என நான் அறிந்தேன். அதில் இலங்கை இனப்பிரச்சினை அரசியல் பேசி, கதையோட்டம் அமைய, ஒருபுறம் இந்திய அரசு சென்சாரும், மறுபுறம் தமிழக அரசியல் கட்சிகளும் விடாது. மேலும் அப்படி கதையமைத்து வம்பில் விழ தயாரிப்பாளர்களுக்கும் தேவை இராது.
முரளியின் வீச்சுக்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட, ஒருவித நிறவாதம் கலந்த எதிர்ப்பு, மற்றும் பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் ஆகியவை திரைகதையை சுவாரசியமாக்கும் என எண்ணுகிறேன்.அதேவேளை முரளியின் தராதரத்துக்கு, அவர் எதோ ஒரு கட்டத்தில் இலங்கை அணியின் கப்டன் ஆகி இருக்க வேண்டும். ஆகவில்லை என்பதற்கு அவர் ஒரு தமிழர் என்பதுவே பிரதான காரணம் என நான் நினைக்கிறேன். இதுவும் திரைகதையில் இடம்பெற வேண்டும். சொல்வார்களா என தெரியவில்லை.
முரளியின், ஆஸ்திரேலிய பந்து வீச்சு கஷ்ட காலத்தின் போது அவருக்கு முதல் துணையாக இருந்தவர், அன்றைய இலங்கை அணி கப்டன் அர்ஜுன ரணதுங்க.என் நண்பரும், இன்றைய எதிரணி அரசியல்வாதியுமான அர்ஜுனா, ஒரு சிங்கள பெளத்தர். சிங்களவராக என்பதை விட, ஒரு இலங்கையராக, ஆஸ்திரேலியே மைதானத்திலேயே, அவர் முரளிக்கு பக்கத்துணையாக தன்னை முரட்டுத்தனமாக அடையாளப்படுத்தினார். இதுவும் திரைகதையில் இடம்பெற வேண்டும்.
கிரிகட்டுக்கு வெளியே, இலங்கை இனக்கலவரங்களில், முரளியின் ஒரு தொகுதி குடும்ப சொத்துகள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன என நான் எங்கேயோ கேள்வி பட்டேன். இதுவும் கதையில் வருமா என தெரிவில்லை.இங்கே இப்போது பிரச்சினை, முரளி என்ற நபர் மீதுதான்.படம் வேண்டாம் என்று சொல்பவர்களின் முதல் அல்லது முழு வாதம், இலங்கையில் தமிழர் கொல்லப்படும் போது, இவர் இங்கே பிடில் வாசித்தார், போர் நடத்திய தரப்புடன் கூட்டாக இருக்கிறார், என்று போகிறது.இந்த குற்றச்சாட்டு இப்போ, ரொம்ப லேட் மற்றும் தர்க்க பொருத்தமற்றது என எண்ணுகிறேன்.
இங்கே, பிடில் வாசிப்பது என்றால் என்ன? கோரப்போர் நடக்கும் போது அதுபற்றி ஒன்றும் தெரியாததை போல் இருப்பது என நினைக்கிறேன்.ஆனால், இதைவிட போரையும், போர் மரணங்களையும் நியாயாப்படுத்துவது என்பது மகா கொடுமையானது.
தமிழகத்தை சொல்லும் முன் நம் இலங்கையை நாம் பார்க்க வேண்டும்.
கோரப்போர் நடந்த போது, கண்டுக்கொள்ளாமல் பிடில் வாசித்தவர்களும் உள்ளார்கள். அப்புறம் போரை நியாயப்படுத்திய, பிரபல அரசியல் மற்றும் சமூக தலைவர்கள், இலங்கையிலும் இருந்தார்கள். தமிழகத்திலும் இருந்தார்கள்.
“போர் என்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்று சொன்ன தமிழக தலைவர்களும், “மக்கள் சாகிறார்கள்தான். ஆனால், (போரின் தமிழ் தரப்பாக அறியப்பட்ட) புலிகள் தோற்று தொலைந்துபோனால் நிம்மதி” என்று சொன்ன இலங்கை தமிழ் தலைவர்களும் இருந்தார்கள்.
இப்போது கடைசியாக நடைபெற்ற தேர்தலில், அன்று போரை நடத்திய இன்றைய அரசு கூட்டணி சார்பாக ஐந்து தமிழ் எம்பீக்களை, போரால் உக்கிரமாக துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்ட, இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்களே தெரிவு செய்துள்ளார்கள். இது சொல்லும் செய்தி என்ன? அந்த மக்களே போரை, போர் கொடுமையை மறக்க விரும்புகிறார்கள் என்பதாகும். இதுதான், சிலர் மறைக்க விரும்பும், இன்றைய கசப்பான உண்மை.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற முறையில் நான் என்ன சொல்கிறேன்?போரில் கொல்லப்பட்ட, காணாமல் போன, உறவுகளை இழந்த, தமிழ் மக்களின் நிலைமை அகோரமானது. அதை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. ஆகவே போர் நடத்தப்பட்ட முறை முற்றிலும் பிழையானது. ஆனால், இன்று போர் இல்லை எனபதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
அதற்கு முன் போர் நடந்துக்கொண்டிருந்த போது, நான் ஒருபோதும் “பிடில் வாசிக்கவில்லை”. “போரை நியாயப்படுத்தவும் இல்லை”. மாறாக, போரால் துன்பப்பட்ட தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காக, இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்தபடியே, உயிர்கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராடினேன். ஆர்பாட்டம் செய்தேன். அன்றைய, ஐநா மனித உரிமை ஆணையர் லூயிஸ் ஆர்பர் அம்மையாரை கொழும்பு வரசெய்தேன். அரசின் கோபத்துக்கு ஆளானேன்.
இந்த நெருக்கடியான வேளையில், என் “கடமையை செய்தேன்” என்ற சுய உணர்வுதான், எனக்குள் இருந்து என்னை எப்போதும் கவசமாக காத்து வருகிறது.ஆகவே இன்று முரளியை இந்த பின்னணியில்தான் பார்க்க வேண்டும்.உண்மையில் இந்த முரளி எதிர்ப்பு பிரசாரத்தை இன்னமும் தூண்டி விட்டு, நான்தான் அதில் குளிர்காய வேண்டும்.
ஏனெனில், கடைசியாக நடந்து முடிந்த தேர்தலில், எனது தொகுதி கொழும்புக்கு வந்து, போதாதுக்கு போர்வெறி அரசியல் செய்யும் அமைச்சர் விமல் வீரவன்சவுக்காக கூட்டம் கூட்டி, என் பெயரையே பகிரங்கமாக குறிப்பிட்டு, “மனோ கணேசனுக்கு வாக்களிக்க வேண்டாம்” என தமிழ் வாக்காளர்களிடம் சொன்னவர், இந்த கிரிகட் முரளி..!
ஆனால், கொழும்பில் நான் வென்றேன். இங்கே எனது வாக்காளர்கள் முரளி சொன்னதை கணக்கில் எடுக்கவில்லை. அப்போது எனது அணியில் இருந்து, என்னை அரசியல்ரீதியாக பலவீனப்படுத்த விரும்பிய ஒருவர்தான், முரளி எனக்கு எதிராக, என் பெயர் சொல்லி பேசியமைக்கு பின்னணி காரணம் என நான் பிறகு அறிந்தேன்.
எப்படியும் முரளி மீது எனக்கு இது தொடர்பில் வருத்தமில்லை.
மேலும் முரளி, மலைநாட்டு நுவரெலியா தொகுதியில், அரசு சார்பாக தன் சகோதரனை, தேர்தலில் களமிறக்கி, தமிழ் வாக்குகளை சிதறடித்தார். அவரது சகோதரர் அங்கு வெல்லவில்லை.ஆனால், முரளியின் சகோதரர், வாக்குகளை சிதறடிக்காமல் இருந்திருந்தால், நுவரெலியாவில் இன்னொரு தமிழ் எம்பி, (அரசு தரப்பில்) வெற்றி பெற்றிருப்பார். இது இவரது பொறுப்பற்ற அரசியலுக்கு உதாரணம்.
எங்களுக்கு எதிரணியான அரசு தரப்பாக இருந்தாலும், அங்கே இன்னொரு தமிழ் எம்பி வரும் வாய்ப்பு கைநழுவியதையிட்டு, கவலையடைவது, எங்கள் பொறுப்புள்ள அரசியலுக்கு உதாரணம்.முரளியின் தந்தை திரு. முத்தையா கண்டியில் எல்லோர் மனங்களையும் கவர்ந்த நல்ல மனிதர். முரளியின் உறவுமுறை அண்ணன் மனோகரன் என் நல்ல நண்பர். அவர் இன்று உயிருடன் இல்லை. இவர்கள் எங்கே இருந்தாலும், என் மீது அன்புள்ளவர்கள்.ஆனால், முரளிக்கு அது இல்லை. ஆகவேதான் இங்கு வந்து, விமல்வீரவன்சவின் கையை பிடித்துக்கொண்டு, எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சொன்னார்.
இவற்றை விளக்கமாக சொல்லக்காரணம், முரளிக்கு அரசியல் பூஜ்யம், என்பதை சுட்டிக்காட்டவே..! அவர் “கிரிக்கட்டில்” ஹீரோ. “பொலிகட்டில்” ZERO.முரளியை விட, சிங்கள மக்களுடன் ஐக்கியமாக நெருங்கி வாழ்பவன், நான். ஆனால், தேசிய ஐக்கியத்துக்கு ஒரு அடிப்படை இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தவன், நான். அவருக்கு இது தெரியவில்லை.
ஆகவே காலத்துக்கு காலம், தன் பொருளாதார இருப்பை தக்க வைக்க, தனக்கு விளங்காத தேசிய அரசியலை பேசுவதை அவரும், அவரது “அரசியலை” சும்மா எழுதி, காட்டி மிகைப்படுத்தும் வேலையை, ஒருசில ஊடக சிறுபிள்ளைகளும் கைவிட வேண்டும்.
உண்மையில் அரசியல் பேசுவதில்தான், முரளி ஒரு விளையாட்டுபிள்ளை. கிரிகட் விளையாட்டில் அவர் ஒரு “சீரியஸ்பிள்ளை”.
முரளி, உலகத்தரம் வாய்ந்த கிரிகட்டர். இதில் சந்தேகமேயில்லை. நம்ம நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்.கண்டியில், நான் படித்த கல்லூரியில்தான் அவரும் படித்தார். அவர் எனக்கு ரொம்ப ஜனியர். நம்ம கல்லூரி அணியிலேயே இடம்பெற அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என என்னால் ஊகிக்க முடிகிறது. ஒரு கத்தோலிக்க கல்லூரியான அங்கேயே இனவாதம் இருந்ததை நான் நேரில் அறிந்தவன்.
பிறகு அவர் தேசியரீதியாக, சிறந்த பாடசாலை விளையாட்டு வீரராக வந்து, தேசிய அணியில் இடம் பிடித்து, அங்கும் அவரது பந்து வீச்சு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு, உலக மைதானங்களிலும், பந்து வீச்சு ஆய்வுகூடங்களிலும், போராடிதான், முரளி உலக வீரராக இன்று அடையாளம் பெற்றுள்ளார்.அவரது திரைப்படம், அவரது பொறுப்பற்ற அரசியலை நியாயப்படுத்தாதவரை, வந்து போகட்டும்..! ஒரு தமிழரின், ஒரு இலங்கையரின், வாழ்க்கை போராட்டம், திரைப்படமாக வரட்டும்..!
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles