தமிழ் முற்போக்குக் கூட்டணியை, ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதில், சிக்கல்கள் எழுந்துள்ளதாகத் தெரியவருகிறது.
இதன் காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம் ஆகியோர், புதிய கூட்டணி ஒன்றை அல்லது தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு புதிய பெயர் ஒன்றைத் தெரிவு செய்யவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று தெரியவருகிறது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியை, ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான கோரிக்கை ஒன்றை, கூட்டணியினர் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்வைத்திருந்தனர்.
இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, அக்கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளின் பொதுச் செயலாளர்களையும் நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து, கடந்த மாதம் கடிதமொன்றை அனுப்பியிருந்தது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச செயலாளர் மனோ கணேசனுக்கும் மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் ஏ.லோறன்ஸ், தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளர் எம்.திலகராஜுக்குமே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொழிலாளர் தேசிய முன்னணியில் உட்கட்சிபூசல்கள் இருப்பதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் எம்.பி திலகராஜ், தேர்தல் ஆணைக்குழுவுக்குக் கடிதம் மூலம் ஏற்கெனவே அறிவித்துள்ளதுடன், கூட்டணியை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதில் தனக்கு உடன்பாடில்லை என அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருப்பதாகவும் அறிய முடிகிறது.
எனவே, தொழிலாளர் தேசிய முன்னணியைத் தவிர்த்து தமிழ் முற்போக்குக் கூட்டணியைப் பதிவு செய்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனாலேயே, தமிழ் முற்போக்குக் கூட்டணியில் பெயர் மாற்றம் செய்து
புதிய கூட்டணி ஒன்றைப் பதிவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தெரியவருகிறது.
நன்றி – தமிழ்மிரர்