கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் இரட்டைப்பாதை பகுதியில் பெண்ணொருவரை மோதிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் பஸ்ஸை, இரு நாட்களுக்கு பிறகு பொலிஸார் இன்று (20) கண்டுபிடித்துள்ளதுடன் பெண்ணின் இறப்பிற்கு காரணமான சாரதியையும் நடத்துனரையும் கைது செய்துள்ளனர்.
கடந்த 18 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் புசல்லாவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு, விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
சம்பவ தினத்தன்று அதிகாலை 1.50 மணியளவில் வெளிமடையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸே குறித்த மூதாட்டியை மோதியுள்ளது என தெரியவந்துள்ளது. இதனையடுத்து சாரதியும், நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் மகளுடன் வசித்து வந்த குறித்த பெண் கடந்த 17 ஆம் திகதி மாலை கொழும்பிலிருந்து பூண்டுலோயா நோக்கி பயணித்த பஸ்ஸில் பயணத்தை மேற்கொண்டு, இரட்டை பாதை பிரதேசத்தில் இறங்கியுள்ளதுடன் சங்குவாரி தோட்டப்பகுதியில் உள்ள தனது பிரிதொரு மகளை பற்றி விசாரித்துள்ளதாகவும் எனினும் மகளின் வீட்டை கண்டு பிடிக்க முடியாமல் வீதியில் அழைந்து திரிந்ததாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சுமார் 70 வயது மதிக்கத்தக்க மேற்படி பெண்ணின் சடலம் அடையாளம் காண்பதற்காக கம்பளை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்கப்படுகின்றனர்
கம்பளை நிருபர்










