கொழும்பு மெனிங் சந்தை மூடப்பட்டமையால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள மரக்கறி வியாபாரிகளுக்கு தங்களது உற்பத்திகளை விற்பனை செய்து கொள்ளும் பொருட்டு பேலியகொட பிரதேசத்தில் புதிய இடமொன்றை ஒதுக்கீடு செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதற்கென அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான இடமொன்றை ஒதுக்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி விரைவில் மெனிங் சந்தையில் கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்குமாறு (2020.11.10) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
தற்போதுள்ள கொவிட் தொற்றுக்கு மத்தியில் பல தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து நேற்று முதல் மீண்டும் மெனிங் சந்தை மூடப்பட்டுள்ளதுடன், அதன் காரணமாக மரக்கறிகளை விற்பனை செய்வதற்காக மெனிங் சந்தைக்கு ஒரு நாளைக்கு வருகைத்தரும் 150 முதல் 200 மரக்கறி லொறிகளை வேறு பொருளாதார மத்திய நிலையங்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டியுள்ளது.
விவசாய உற்பத்திகளுக்காக விவசாயிகளுக்கு சிறந்த விலையை பெற்றுக் கொடுக்கவும், அதன் மூலம் மரக்கறி தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நுகர்வோருக்கு தேவையான மரக்கறிகளை விநியோகிப்பதற்கும் எதிர்பார்ப்பதுடன், பீ.சீ.ஆர். பரிசோதனைகளை தொடர்ந்து முழுமையான சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி புதிய சந்தை நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் கௌரவ அமைச்சர்களான பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, எஸ்.எம்.சந்திரசேன, சி.பீ.ரத்நாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.