உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரமே அடுத்தக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ தான் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிஐடியில் நேற்று (நேற்று முன்தினம்) வாக்குமூலம் வழங்கி இருந்தார். சுமார் ஐந்தரை மணிநேரம் அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.
அவரின் (மைத்திரி) அறிவிப்பு தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. அந்த விசாரணையின் அடிப்படையில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை இடம்பெறும்.” – என்றார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்;.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை உண்மையிலேயே யார் நடத்தினார்கள் என்பது தனக்கு தெரியும் எனவும், நீதிமன்றம் உத்தரவிட்டால் அதனை வெளிப்படுத்த தயார் எனவும் மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
