மொக்கா தோட்டத்தில் மூவருக்கு பீசீர் பரிசோதனை! 17 பேர் சுய தனிமையில்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொக்கா தோட்டத்தில் மிட்லோஜியன் பிரிவில் இரண்டு குடும்பங்களைச்சேர்ந்த 17 பேர் கடந்த 7 ஆம் திகதி இரவு முதல் அவர்களின் வீடுகளுக்குள்ளேயே சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் நேற்றிரவு (8) மூன்று பேரை மாத்திரம் கொரோனா தடுப்பு முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்து தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிய மஸ்கெலியா, மொக்கா தோட்ட மிட்லோஜியன் பிரிவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களும், ஒரு யுவதியும் கடந்த 3 ஆம் திகதி புகையிரதத்தின் மூலம் அட்டனுக்கு வந்து, அங்கிருந்து பஸ்ஸில் மஸ்கெலியா ஊருக்கு சென்றுள்ளனர்.

மினுவாங்கொட கொரோனா கொத்தணி பரவலையடுத்து மேற்படி மூவரும் அவர்களின் உறவினர்களும் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் மினுவாங்கொடயில் இவர்கள் வசித்த குடியிருப்பு பகுதியில் தங்கியிருந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மேற்படி குறித்த மூவரிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக அம்புலன்ஸ் வண்டி மூலம் நேற்றிரவு (8) ரந்தம்பே தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

இவர்களின் உறவினர்கள் வீடுகளுக்குள்ளேயே தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles