” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கதவும், சலூன் கதவுபோன்றே திறந்துள்ளது. எவரும் வரலாம், வெளியேறலாம். அதற்கான சுதந்திரம் உறுப்பினர்களுக்கு உள்ளது.” – என்று நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படுபவர்கள் கட்சிக்குள் வர விரும்பினால் அது தொடர்பில் அவர்கள் முடிவெடுக்கலாம். பேச்சு நடத்துவதற்காக எமது கட்சியின் கதவு திறந்தே உள்ளது.
45 வருடகாலமாக அரசியலில் எதிரும், புதிருமாக இருந்த ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ச ஆகியோரால் இணைந்து செயற்பட முடியுமென்றால், 45 வருடகாலமாக எனது தந்தையுடன் இருந்தவர்களுடன் பேச்சு நடத்துவதில் பிரச்சினை இருக்காது என்றே நான் நினைக்கின்றேன்.
அதேவேளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இல்லை என விமர்சனம் முன்வைக்கப்பட்டுவந்தது. ஆனால் இன்று தம்மிக்க பெரேராகூட போட்டியிட தயார் என அறிவித்துள்ளார். கட்சி சிறந்த மட்டத்தில் உள்ளது என்பதற்கு இது சான்றாகும்.
மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை கட்சி ஆதரவாளர்களும், செயற்பாட்டாளர்களும்தான் உரிய நேரத்தில் தீர்மானிப்பார்கள்.” – என்றார்.
