ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்டத் தலைவர்கள் கலந்துகொண்ட, கட்சியின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பான கூட்டத்தில் மாவட்டத்தின் மூன்று தலைவர்கள் பங்கேற்கவில்லை என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தரத்வத்தவின் வீட்டில் நேற்றுமுன்தினம் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது எனக் கூறப்படுகின்றது.
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம மற்றும் அனுராத ஜயரத்ன ஆகியோரே இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத அரசியல்வாதிகள்.
பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் காரியவசம் கையொப்பமிட்ட கடிதத்தின் மூலம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , ரோஹித அபேகுணவர்தன மற்றும் மாகாண சபை மற்றும் பிரதேச அரசியல்வாதிகள் பலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
எனினும் அன்றைய தினம் குறித்த மூவரும் பங்கேற்காத காரணத்தினால் எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பில் உள்ள கட்சி அலுவலகத்தில் இது தொடர்பான சந்திப்பை மீண்டும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில் கட்சியின் எதிர்கால அரசியல் விவகாரங்கள் குறித்து தீர்மானம் எடுப்பதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
