” மலையக மக்கள் முன்னணிக்கும் தேசிய பேரவைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பதற்கு நாம் தயாராக இல்லை. காரணம் , ஆட்சியாளர்கள் மக்கள் நலன் சார்ந்த விடயங்களை விட்டுவிட்டு, தங்களை பாதுகாத்துக் கொள்வதிலும் , வேறு செயற்பாடுகளுக்குமே முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர். எனவே இது மக்கள் நலன் சார்ந்த அரசாங்கம் இல்லை.”

இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பு நேற்று (02.10.2022) நுவரெலியா வாசிகசாலை மண்டபத்தில் நடைபெற்றது. மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம் , மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பா , உப தலைவர் ஜெயராம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய இராதாகிருஷ்ணன்,
” இன்று இந்த அரசாங்கம் மக்கள் நலன்சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு – காலையில் வர்த்தமானியை வெளியிடுவதும், மாலையில் மீளப்பெறுவதுமென கோட்டா ஆட்சியில் நடந்ததுபோல் நடந்து வருகின்றது.
இவர்களுக்கு மக்கள் மீதோ அல்லது இந்த நாட்டின் மீதோ எந்தவிதமான அக்கறையும் இல்லை.அது மட்டுமல்லாமல் பாதுகாப்பு வரி என 2.5 வீதமான வரியை அதிகரித்து மீண்டும் இந்த மக்களின் வயிற்றில் கைவைத்திருக்கின்றது இந்த அரசாங்கம். பாதுகாப்பு வரி எதற்காக மக்களை பாதுகாப்பதற்கா?அல்லது தங்களுடைய அரசாங்கத்தை பாதுகாப்பதற்கா?நிச்சயமாக இந்த வரி அதிகரிப்பு என்பது அரசாங்கத்தை பாதுகாப்பதற்கே.
இந்த வரி அதிகரிப்பின் காரணமாக மீண்டும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்.இந்த அதிகரிப்பு நடுத்தர மக்களையும் கீழ் மட்டத்தில் இருக்கின்ற மக்களையும் பாதிக்கப்போகின்றது.
குறிப்பாக எங்களுடைய பெருந்தோட்ட தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு அதற்கான நிவாரணம் இல்லை.அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரி ய சம்பளத்தை பெற்றுக் கொடுக்க எந்தவிதமான செயற்பாடுகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.மாறாக தொழிலாளர்களுக்கு எதிரான செயற்பாடுகளை இந்த அரசாங்கம் பதவியேற்ற காலம் முதல் தோட்ட நிர்வாகங்கள் முன்னெடுத்து வருகின்றன.
எனவே எங்களுடைய பெருந்தோட்ட தொழிலாளர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கின்றது.அவர்கள் போராட தெரியாதவர்கள் அல்ல.ஆனால் அவர்கள் பொறுமை காத்துவருகின்றார்கள்.இன்றும் கூட இந்த அரசாங்கத்திற்கான டொலரை கொண்டு வருவதில் அவர்கள் தொடரந்தும் தங்களுடைய பங்களிப்பை செய்துவருகின்றார்கள்.அதனை இந்த அரசாங்கம் மறந்து செயற்படுகின்றது.
யார்? இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டாலும் நாம் மலையக மக்கள் முன்னணியாக எந்த விதமான செயற்பாடுகளுக்கும் ஒத்துழைக்க தயாராக இல்லை. அதற்கு முக்கிய காரணம் இந்த அரசாங்கம் சர்வதேசத்தையும் இந்த நாட்டு மக்களையும் ஏமாற்றுவதற்காகவே தேசிய சபை தேசிய அரசாங்கம் என்ற வார்த்தைகளை பாவித்து வருகின்றது.
இந்த வார்த்தைகள் அனைத்தும் வெறுமனே பேச்சளவிலே இருக்கின்றதே தவிர செயற்பாடுகளில் ஒன்றுமே இல்லை.இதனை நம்பி நாம் ஏமாறுவதற்கும் தயாராக இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசியப் பேரவைக் கூட்டத்தில் மனோ கணேசன், திகாம்பரம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.










